×

மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் காதி ஆடைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்; தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பேச்சு

சென்னை: மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் காதி ஆடைகள் பற்றி  விழிப்புணர்வு  ஏற்படுத்த வேண்டும் என தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார். காந்தி ஜெயந்தி மற்றும் தீபாவளியை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள காதி பவனில் சிறப்பு தள்ளுபடி விற்பனையை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார். பின்னர் ஆதரவற்ற ஆசிரமக் குழந்தைகளுக்கு இலவச ஆடைகளை வழங்கிய ஆளுநர், கைத்தறி துறை சார்பில் நடத்தப்பட்ட போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில்  கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி மற்றும் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.  

இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ரவி, தமிழில் வணக்கம் என்று கூறி தன் உரையை தொடங்கினார். மேலும், “நம் நாட்டிற்கும், உலகிற்கும் இன்று மிக மிக முக்கியமான நாள். மகாத்மா காந்தி ஒரு அரசியல் தலைவர் மட்டுமல்ல. அவர் குறிக்கோள் கொண்ட சிறந்த மனிதர். அவர் எல்லாருக்கும் அன்பானவராகவும், ஏழை மக்களுக்கு நெருக்கமான தொடர்பில் இருந்தார். நிறைய பன்முகதன்மை கொண்ட இந்திய நாட்டில் காந்தியின் தத்துவம், சிந்தனை, கற்பித்தல் எல்லாம் நாட்டின் தேவை பற்றியும் ஏழைகளைப் பற்றி மட்டுமே  இருந்தது. இதற்கு முன்பு இருந்ததை விட தற்போது நமக்கு மகாத்மா காந்தி மிகவும் அதிகமாக தேவைப்படுகிறார். ஒவ்வொரு பகுதியில் ,சமூகத்தில் உள்ள நாம் எல்லாரும் ஒன்று சேர்ந்து வளர்ந்தால் தான் நம் நாடு வளரும்.

நாட்டின் ஜவுளித்துறை வளர்ச்சியை மேம்படுத்தவே காந்தியடிகள் சுதேசி இயக்கத்தை தொடங்கினார். காதி நாட்டின் ஒரு சிறந்த ,சக்தி வாய்ந்த சின்னமாக விளங்குகிறது. தமிழ்நாடு அரசு காதி விற்பனையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. காதியை பற்றி மாணவர்கள் இடத்திலும் இளைஞர்கள் இடத்திலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். விற்பனையாளர்கள் புதிய வழிமுறைகளை கண்டுபிடித்து காதியை விளம்பரப்படுத்த வேண்டும். எல்லாரும் காதியை வாங்க வேண்டும் காதியை அணிய வேண்டும். உலக அளவில் காதி வித வித வடிவங்களில் பல்வேறு நாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது. இன்னும் நிறைய புதிய வடிவங்களை நாம் தயாரிக்க வேண்டும்.” என்று தெரிவித்தார். 


Tags : Kadi ,Tamil Nadu ,Governor ,R. N.N. Ravi , To create awareness about Khadi garments among students and youth; Tamil Nadu Governor R.N. Ravi speech
× RELATED புதுச்சேரியில் கவர்னர் தமிழிசை...