×

குழந்தை தொழிலாளர் மீட்பு மையங்கள் மூடப்படும் அவலம்: திட்டத்தை நிறுத்தியது ஒன்றிய அரசு

பழமையில் ஊறிக் கிடந்த சமுதாயத்தில் பாய்ச்சல் வேகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தியது படிப்பறிவு மட்டுமே. காலத்துக்கு ஒவ்வாத நடைமுறைகளை விட்டு விட்டு சமுதாய மாற்றத்தை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை அளித்ததும் படிப்பறிவு தான்.   இவ்வளவு மாற்றங்கள் நிகழ்ந்த பிறகு சிறந்த கல்வி அனைவருக்கும் வசப்படவில்லை என்றுதான்  சொல்ல வேண்டும். நேஷனல் சர்வே ஆப் இந்தியாவின் சமீபத்திய ஆய்வறிக்கையில், இந்த ஆண்டு இந்தியாவில் படிப்பறிவு 77.7 சதவீதமாக உள்ளது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, கல்வி கற்பதற்கான வாய்ப்புகள் பெருகி விட்ட நிலையிலும், எத்தனையோ குடும்பங்களில் படிப்பறிவு இல்லாமலும், படிப்பதற்கு வசதி இல்லாமலும் குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் அவல நிலை தொடர்ந்து கொண்டு  இருக்கிறது.

இதிலிருந்து அவர்களை மீட்பதற்காக கொண்டுவரப்பட்ட திட்டம்தான் தேசிய குழந்தை தொழிலாளர் திட்டம் (ராஷ்டிரீய பால் ஸ்ரம் பரியோஜனா). குழந்தை தொழிலாளர்களை மீட்டு அவர்களுக்கு கல்வி கிடைக்க வகை செய்வது இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம். ஆனால் பாஜ தலைமையிலான ஒன்றிய அரசு கடந்த மார்ச் மாதத்துடன் தேசிய குழந்தை தொழிலாளர் திட்டத்தை நிறுத்திவிட்டது. சமக்ர சிக்‌ஷா அபியான் எனப்படும் முழுமையான கல்வித் திட்டத்துடன் இணைக்கப்பட்டு விட்டதாக ஒன்றிய அரசு அறிவித்து விட்டது.

ஒன்றிய அரசு கடந்த 2018 மே மாதம் சமக்ர சிக் ஷா அபியான் எனப்படும்  முழுமையான கல்வி திட்டத்தை தொடங்கியது. சர்வ சிக் ஷா அபியான், ராஷ்டிரிய மத்யமிக் சிக் ஷா எனப்படும் இடைநிலைக்கல்வியின் தரத்தை உயர்த்த கொண்டுவரப்பட்ட திட்டத்தையும் ஒருங்கிணைக்கும் வகையில் இந்த திட்டம் செயல் படுத்தப்பட்டது.  இவ்வாறு இணைக்கப்பட்ட பிறகு, அதாவது மார்ச் மாதத்துக்கு பிறகு, குழந்தைத்தொழிலாளர்களை மீட்கும் கதவுகள் ஏறக்குறைய அடைக்கப்பட்டு விட்டதாக சமூக ஆர்வலர்கள் சிலர் தெரிவிக்கின்றனர். பழங்குடியினரின் குழந்தைகள் இந்த திட்டத்தின் கீழ் அதிகமாக மீட்கப்பட்டுள்ளனர். இந்த மையங்கள் மூடப்பட்டு விட்டதால், குழந்தை தொழிலாளர்களை கண்காணிக்க வழியின்றி போய்விட்டது. இனி இவர்களை மீட்டு கல்வி கிடைக்கச் செய்வது யார் எனவும் கேள்வி எழுந்துள்ளது.

செங்கல் சூளைகள் உட்பட கூலி வேலை பார்த்து பிழைப்பை ஓட்டுவதற்காக புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளும் இந்த திட்டத்தால்  பயன் பெற்றுள்ளனர் கூலிவேலை பார்க்கும் ஒரு சிறுவனின் தாய் கூறுகையில், ‘அரசு பள்ளிக்கு சென்று வருவதற்கு கூட செலவிட இயலவில்லை. எனது மகன் படிப்பதற்கு ₹400 உதவித்தொகை கிடைக்கும். ஆனால், மார்ச் மாதத்துக்கு பிறகு கிடைக்கவில்லை’ என்றார்.

குழந்தை தொழிலாளர் திட்ட பணியில் ஈடுபட்ட ஒருவர் கூறுகையில், ‘‘தேசிய குழந்தை தொழிலாளர் திட்டம் போல சமக்ர சிக்‌ஷா  திட்டம் செயல்படுவதில்லை. சில பகுதிகளில் மாணவர்கள் 5 முதல் 10 கி.மீ தூரம் பள்ளிகளுக்கு நடந்து செல்ல வேண்டியுள்ளது. இதற்கு சமக்ர சிக்‌ஷா  திட்டம் உதவுவதில்லை. தேசிய குழந்தை தொழிலாளர் திட்டம் 1988ம் ஆண்டில் இருந்தே அமலில் உள்ளது. இதுவரை இந்த திட்டத்தின் கீழ் 2 லட்சம் பேர் மீட்கப்பட்டு பயிற்சி மையங்களில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில்  1.2 லட்சம் குழந்தைகள் பள்ளிகளில் சேர்க்கப்பட்டு கல்வி பெற்றுள்ளனர். தமிழகத்தில் குறிப்பாக திருச்சியில் மட்டும் 28,000 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டு, அவர்களில் 11,000 பேர் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்’’ என்றார்.

இதற்காக நாடு முழுவதும் 59 மாவட்டங்களில் கடந்த ஆண்டு மார்ச் 31ம் தேதிப்படி 1225 சிறப்பு பயிற்சி மையங்கள் உள்ளதாகவும், இவற்றில் 33,573 குழந்தை தொழிலாளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது. இந்த மையங்களின் தலைவராக, மாவட்ட நீதிபதி பொறுப்பு வகிப்பார். பிற மாநிலங்களை விட அதிகபட்சமாக தமிழகத்தில் மட்டும் 15 மாவட்டங்களில் மொத்தம் 233 மையங்கள் உள்ளன.

சமூக ஆர்வலர்கள் மற்றும் திட்டப்பணியில் ஈடுபட்டவர்கள் சிலர் அளித்த தகவலின்படி, இந்த மையங்கள் மூடப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. இதனால், கண்காணிக்கவும் வழியின்றி, கைதூக்கி விடவும் ஆளின்றி குடும்ப பாரத்தை சுமக்கும் அழுத்தத்துக்கு ஆளாகும் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் அச்சம் ஏற்பட்டுள்ளது. திட்டங்களை இணைப்பதும், பெயர்களை மாற்றம் செய்வதும் மட்டுமே தீர்வல்ல… அனைவருக்கும் பலன் அளிக்கும் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வாழ்வியல் சமநிலையை பேணுவது அரசின் கடமை. குழந்தை தொழிலாளர்களை மீட்காவிட்டால், அவர்களின் கனவு செங்கல் சூளையிலேயே சமாதியாகிவிடும். இந்த சீரழிவுக்கு ஒன்றிய அரசே காரணமாகிவிடக்கூடாது என்பது, இவர்களை மீட்கத்துடிக்கும் சமூக ஆர்வலர்களின்  கவலையாக உள்ளது.

நின்றுபோன உதவித்தொகை
தேசிய குழந்தை தொழிலாளர் திட்டத்தின் கீழ் மீட்கப்பட்டு பயிற்சி மையத்தில் சேர்க்கப்பட்ட குழந்தைகளுக்கு மாதம் ₹150 வீதம் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. பின்னர். 2017 பிப்ரவரி மாதம் இந்த தொகை மாதம் ₹400 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், அதன் பிறகே இந்த நிதியுதவி பெரும்பாலானோருக்கு கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. இதுதொடர்பாக திருப்பூர் எம்பி சுப்பராயன் ஓராண்டு முன்பு திட்ட இயக்குநருக்கு எழுதிய கடிதத்தில் இதனை குறிப்பிட்டுள்ளார். இதுமட்டுமின்றி, திட்டத்தில் பணியாற்றிய சிலருக்கு சரிவர சம்பளம் வழங்கப்படவில்லை எனவும் குற்றச்சாட்டு நிலவுகிறது.

கொரோனா ஊரடங்கால் குழந்தை தொழிலாளர் எண்ணிக்கை அதிகரிப்பு
கொரோனா ஊரடங்கு, உலக பொருளாதாரத்தையே புரட்டிப் போட்டு விட்டது. இந்தியாவிலும் 2 ஆண்டுகளாக நீடித்த ஊரடங்கால் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்ட குடும்பங்கள் ஏராளம். வாழ்வாதாரம் பறிபோனதால் ஏழ்மை நிலையில் உள்ள குடும்பத்தில் குழந்தைகள் வேலைக்கு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. யூனிசெப் நிறுவனம் கடந்த ஆண்டு சமர்ப்பித் ஆய்வறிக்கையின்படி, உலக அளவில் குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கை 16 கோடியாக உயர்ந்துள்ளது என தெரிவித்துள்ளது.


கடந்த 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 5 முதல் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 25.96 கோடி பேர். இவர்களில் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் வேலையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதாவது, 2001க்கும் 2011க்கும் இடைப்பட்ட காலத்தில்  26 லட்சம் குழந்தை தொழிலாளர்கள் அதிகரித்துள்ளனர்.  நாட்டில் உள்ள மொத்த குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கையில் உத்தர பிரதேசம், பீகார், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் உள்ளவர்கள் மட்டும் சுமார் 55 சதவீதம் பேர் என்பது மக்கள் தொகை கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.

தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘குழந்தை தொழிலாளர்கள் குறித்து முறையான கள ஆய்வு மேற்கொள்ள வேண்டியது அவசியம்’’ என வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் கடந்த ஆண்டு வெளியிட்ட குழந்தை தொழிலாளர் குறித்த ஆய்வறிக்கையின்படி, கொரோனா காலத்தில், அதாவது 2019ம் ஆண்டுக்கு பிறகு குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கை 2.8 மடங்கு அதிகரித்துள்ளது என தெரிய வந்துள்ளது.

திட்டத்தின் செயல்பாடுகள்
குழந்தைத் தொழிலாளர் திட்டத்துக்காக நாடு முழுவதும் மாவட்டம் தோறும் மையங்கள் உள்ளன. இந்த மையங்களில் உள்ளவர்கள்தான், குழந்தை தொழிலாளர்கள் பற்றிய தகவல் கிடைத்ததும் அவர்களை மீட்டு கல்வி கிடைக்க வழி வகை செய்கின்றனர். தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டத்தின் கீழ் 9 வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட, கூலி வேலைகளில் ஈடுபடுத்தப்பட்ட குழந்தைகள் மீட்கப்பட்டு, இந்த மையத்தின் சிறப்பு பயிற்சி மையத்தில் சேர்க்கப்படுவார்கள். அவர்களுக்கு கல்வி கற்பிப்பது, தொழில் படிப்புகள், மதிய உணவு, கல்வி உதவித்தொகை, உடல் நலத்தை பேணுவதற்கான நடவடிக்கைகள் உட்பட அனைத்தும் இங்கு மேற்கொள்ளப்படும். அதன் பிறகே அவர்கள் வழக்கமான கல்வித்திட்டத்தின் கீழ் பள்ளிகளில் சேர்க்கப்படுவார்கள்.


Tags : Child Labour Rescue Centers ,Union government , Center for Child Labor Recovery, scheme stopped by Union Government, National Survey of India
× RELATED தமிழகத்துக்கு பதில் குஜராத்தில் ஆலை...