கோட்டூர்ரோடு ரயில்வே மேம்பாலத்தில் விபத்தை தடுக்க வேகத்தடை அமைப்பு: பொதுமக்கள் வரவேற்பு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி கோட்டூர்ரோடு ரயில்வே மேம்பால ரோட்டில், வாகன விபத்துக்களை தடுக்க, மிதமான வேகத்தடை அமைத்திருப்பது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. பொள்ளாச்சி நகரிலிருந்து பிரிந்து செல்லும் முக்கிய ரோட்டில் ஒன்றான, கோட்டூர்ரோடு ரயில்வே மேம்பாலத்தில், அடிக்கடி ஆங்காங்கே பள்ளம் ஏற்படுவதால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுவதுடன், அடிக்கடி விபத்து நேரிடுவதாக தொடர்ந்து புகார் எழுந்தது. மேலும், மேம்பாலத்தின் இருபுறத்திலும் உள்ள தடுப்புசுவரின் உயரம் குறைவாக இருப்பதால், அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.

எனவே,  நிரந்தர தீர்வு காணும் வகையில், கோட்டூர்ரோடு ரயில்வே மேம்பாலத்தில் தரமான முறையில் சாலையமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து சில மாதத்திற்கு முன்பு, அந்த பகுதியை, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதில் முதற்கட்டமாக, மேம்பாலத்தின் இருபுறமும் உயரம் குறைவாக உள்ள தடுப்புச்சுவரின் மேல் பகுதியில், மேலும் சுமார் 3அடி உயரத்தில் இரும்பாலான தடுப்பு ஏற்படுத்தப்பட்டது.

இதையடுத்து மேம்பாலத்தில் ஆங்காங்கே பெயர்ந்த நிலையில் இருந்த பகுதியில், வாகன ஓட்டிகள் அச்சமின்றி சென்று வரும் வகையில், தார்கொண்டு பேட்ஜ் ஒர்க் மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையே, கோட்டூர்ரோடு மேம்பாலத்தில், பகல் மற்றும் இரவு நேரத்திலும், சிலர் அதிவேகமாக வாகனங்களை இயக்கி செல்வதால், மீண்டும் விபத்து நேரிடுமோ என்ற வேதனை பொதுமக்களிடையே எழுந்தது.

இதையடுத்து, தற்போது கோட்டூர்ரோடு ரயில்வே மேம்பாலத்தின் இருபுறமும் துவக்க பகுதிகளில் அடுத்தடுத்து மிதவேக தடை அமைக்கப்பட்டது. மேம்பால இரு எல்லையில் 4 இடங்களில் தலா 6 மித வேக தடை அமைக்கப்பட்டுள்ளதால், தற்போது அந்த வழியாக வேகமாக வரும் வாகன ஒட்டிகள், மிதவேகத்தடை வந்ததும், தங்களின் வேகத்தை குறைத்து கடந்து செல்கின்றனர். இதனால், வருங்காலங்களில் விபத்து நடப்பது கட்டுப்படுத்தப்படும் எனவும், நெடுஞ்சாலைத்துறையினரின் இத்தகையை நடவடிக்கையை, பொதுமக்கள் பாராட்டினர்.

Related Stories: