வீட்டை உடைத்து 15 சவரன் கொள்ளை

குன்றத்தூர்: குன்றத்தூர் அருகே தனியார் நிறுவன ஊழியரின் வீட்டை உடைத்து 15 சவரன் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடுகின்றனர். குன்றத்தூர் அடுத்த மணஞ்சேரி, ராஜகணபதி நகரை சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (35). இவருக்கு திருமணமாகி நிவேதா (30) என்ற மனைவி உள்ளார். இருவரும் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் 2 பேரும் வீட்டை பூட்டிவிட்டு, வெளியூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டனர். மீண்டும் நேற்று மாலை தங்களது வீட்டிற்கு வந்த இருவருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது.

வீட்டின் பின்பக்க கதவில் இருந்த பூட்டுகள் அனைத்தும் உடைக்கப்பட்டு, கதவுகள் திறந்துகிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் மறைத்து வைத்திருந்த 15 சவரன் தங்க நகைகள் திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து, குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், கொள்ளையர்களின் கைரேகை பதிவுகளை ஆய்வு செய்தனர். மேலும், அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான கொள்ளையர்களின் உருவத்தை வைத்து தேடி வருகின்றனர்.

Related Stories: