தேசிய நெடுஞ்சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளால் விபத்து ஏற்படும் அபாயம்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். காஞ்சிபுரம் அருகே, சென்னை  - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், வேலூர் மார்க்கமாக ராணிப்பேட்டை, ஆற்காடு, சென்னை மார்க்கமாக, ஸ்ரீபெரும்புதூர், பூந்தமல்லி செல்லும் ஏராளமான பேருந்துகள், கனரக வாகனங்கள் டுவீலர்கள் சென்று வருகின்றன. மேலும் ராஜகுளம் முதல், சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த தொழிற்சாலைகளில் ஷிப்ட் முறையில் ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இவர்களில் பலர் தொழிற்சாலை பேருந்துகளிலும், பைக்கிலும் சென்று வருகின்றனர். இதனால் இந்த சாலையில் எப்போதும் போக்குவரத்து அதிகமாக இருக்கும். இந்நிலையில் காலை மற்றும் மாலை நேரங்களில் இந்த சாலையில் பசுமாடுகள், ஆடுகள் ஆகியவை சுற்றி திரிகின்றன.அவ்வாறு கால்நடைகள் சுற்றித் திரிவதால் பஸ், லாரி, கார்கள் மட்டுமன்றி இருசக்கர வாகனத்தில் செல்வோரும் விபத்தில் சிக்கி சாலையில் விழுகின்றனர்.  மேலும், ஒரு சில இடங்களில் சாலையின் நடுவே இந்த கால்நடைகள் அமர்ந்து விடுவதால் போக்குவரத்து தடை ஏற்படுவதுடன் நெரிசல் ஏற்பட காரணமாக உள்ளது. இதனால், கவனிக்காமல் வரும் வாகன ஓட்டிகள் சாலையில் விழுவதுடன் மாடுகள் மீது மோதுவதால் அவற்றுக்கும் காயம் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது.

இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் தேசிய நெடுஞ்சாலைகளில் கால்நடைகளை விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கால்நடைகள் பறிமுதல் செய்யப்பட்டால் திருப்பித் தரப்பட மாட்டாது எனவும் எச்சரிக்கை விடுத்தும் கால்நடை சுற்றித் திரிவது குறையவில்லை. எனவே, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories: