காஞ்சியில் உணவு திருவிழா பாரம்பரிய உணவு வகைகளை உண்டு மகிழுங்கள்: உத்திரமேரூர் எம்எல்ஏ பேச்சு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் நடைபெற்ற உணவு திருவிழாவில், முடிந்தவரை பாரம்பரிய உணவு வகைகளை உண்டு மகிழுங்கள் என உத்திரமேரூர் எம்எல்ஏ க.சுந்தர் தெரிவித்தார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் வளாகத்தில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், தேசிய ஊட்டச்சத்து மாதம் ஆகியவைகளையொட்டி பாரம்பரிய உணவு திருவிழா  நேற்று நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்திரய்யா  தலைமை தாங்கினார். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கிருஷ்ணவேணி வரவேற்று பேசினார். உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதா முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக உத்திரமேரூர் எம்எல்ஏ க.சுந்தர் கலந்துகொண்டு உணவு திருவிழாவை தொடங்கி வைத்து சிறந்த முறையில் புகையில்லா சமையல் போட்டிகளில் கலந்துகொண்ட தாய்மார்களுக்கு பரிசுகளை வழங்கி பேசியதாவது:

பாரம்பரிய உணவு வகைகள் நாம் தேடிப் பிடித்து கண்டுபிடித்து சாப்பிட வேண்டும். ஜங் ஃபுட் எனும் உணவு வகைகளை ஒதுக்கி வைத்து விட வேண்டும். அப்படி ஜங் ஃபுட் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் அதன் மூலம் வரும் நோய்கள், பக்க விளைவுகளை நாம் எதிர்கொள்ள வேண்டி இருக்கும். நெல், கேழ்வரகு உள்ளிட்ட இயற்கை தானியங்களை உண்டு மகிழவேண்டும். மாவட்ட அளவில் நடந்த இந்த உணவுத் திருவிழாவை கிராம அளவிலும் கொண்டு சேர்ந்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தற்போது உள்ள சூழ்நிலையில் குடிநீர், காற்று போன்றவைகள் மாசடைகின்ற சூழ்நிலையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பாரம்பரிய நல்ல சத்தான உணவுகளை தேடி கண்டுபிடித்து சாப்பிட வேண்டும்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா என்னும் பெரும் தொற்று வந்தபின்பும் நாம் உயிர்பிழைத்திருக்கும் என்றால் மறுபிறவி தான் எடுத்திருக்கிறோம் என்று அர்த்தம். அந்த வகையில் இது போன்ற நோய்களை எதிர்க்கும் வகையில் நல்ல சத்தான உணவுகளை உண்டு வாழ வேண்டும். மிகுந்த நோய் எதிர்ப்பு சக்தியுள்ள மஞ்சள் நமது நாட்டில் தான் விளைகிறது. ஆனால் அது வெளிநாடுகளுக்குச் சென்று ஏற்றுமதி ஆகி பின்னர் நம்மிடையே வந்து சேர்கிறது. இனிவரும் காலங்களில்  நோய் எதிர்ப்பு சக்தி உள்ள பாரம்பரியமிக்க உணவு வகைகளை உண்டு வாழ  நாம் பழகிக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இவ்விழாவில், வாலாஜாபாத் ஒன்றிய குழு தலைவர் தேவேந்திரன், பகுதி செயலாளர் தசரதன், ஒன்றிய செயலாளர் குமணன் உள்ளிட்ட ஏராளமான பெண்கள் தங்கள் பாரம்பரிய உணவு வகைகளை கண்காட்சிக்கு வைத்து பின்னர் அனைவருக்கும் பரிமாறினார்கள் அனைவரும் உண்டு நம்முடைய பாரம்பரியத்தின் இவ்வளவு உணவு வகைகள் என்று ஆச்சரியத்துடன்  உண்டு மகிழ்ந்தனர். முடிவில்  மோனிஷா வெங்கடேஷ் நன்றி கூறினார்.

Related Stories: