திருவேற்காட்டில் பரபரப்பு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் தலைமை ஆசிரியர் கைது

சென்னை: சென்னையை அடுத்த திருவேற்காட்டில் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் ராஜா முத்தெழில்(49) என்பவர் கூடுதல் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் 10ஆம் வகுப்பு படிக்கும் 2 மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக, அந்த மாணவிகள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, மாணவிகளின் பெற்றோர் போரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், ராஜா முத்தெழில் மீது புகார் அளித்தனர்.

புகாரின்பேரில் மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து ராஜா முத்தெழிலை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில் அவர் பள்ளி வகுப்பறையில் மாணவிகளிடம் கையை பிடித்து போர்டில் எழுத வைப்பது உள்ளிட்ட பல்வேறு விதமான பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டது தெரியவந்தது. மாணவிகளிடம் மட்டுமன்றி அங்கு பணிபுரியும் ஆசிரியைகளிடமும் அவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.  இதையடுத்து ராஜா முத்தெழில் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிந்த மகளிர் போலீசார், அவரை கைது செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: