பிரிவினையை கோரவில்லை மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் கேட்கிறோம்: இந்திய கம்யூ. கேரள மாநில மாநாட்டில் மு.க.ஸ்டாலின் பேச்சு

திருவனந்தபுரம்: சுயாட்சி தன்மை கொண்டவையாக மாநிலங்கள் இருப்பதை ஒருமைப்பாட்டிற்கு விரோதம் என்று  ஆட்சியில் உள்ள பாஜவினர் மாற்றி சொல்கிறார்கள். நாம் கேட்பது மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் தானே தவிர பிரிவினை மாநிலங்கள் அல்ல. இந்திய அளவில் கூட்டாட்சியை ஒப்புக்கொள்பவர்களால் கேட்கப்படுவதுதான் மாநிலத்தில் சுயாட்சி என்று கேரளாவில் நடந்த இந்திய கம்யூனிஸ்ட் மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். இந்திய  கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது தேசிய மாநாடு விஜயவாடாவில் நடைபெற உள்ளது.  இதையொட்டி 4 நாள் நடைபெறும் கேரள மாநில மாநாடு திருவனந்தபுரம் புத்தரிக்கண்டம் மைதானத்தில் நேற்று  முன்தினம் தொடங்கியது. மாநாட்டின்  2வது நாளான நேற்று பிரதிநிதிகள் மாநாடு நடந்தது. இந்திய  கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா மாநாட்டை தொடங்கி  வைத்தார்.

தொடர்ந்து மாலை 5 மணியளவில் திருவனந்தபுரம் தாகூர் அரங்கத்தில்  கூட்டாட்சியும், மத்திய, மாநில உறவுகளும் என்ற தலைப்பில் சிறப்பு  கருத்தரங்கு நடைபெற்றது. இதில் தமிழக  முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வர் பினராய் விஜயன், இந்திய  கம்யூனிஸ்ட் கட்சி தேசிய செயற்குழு உறுப்பினர் அதுல்குமார் அஞ்சான் ஆகியோர்  கலந்து கொண்டு பேசினர். கருத்தரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தமிழ்நாட்டில் கூட்டணி கட்சி மாநாடுகள் நடந்தால் என்னை அழைப்பார்கள். ஆனால் சமீப காலமாக கேரளாவில் நடக்கும் கூட்டணி கட்சி மாநாடுகளிலும் என்னை அழைப்பதை வழக்கமாக வைத்துள்ளீர்கள். மாநில எல்லைகள் நம்மை பிரித்தாலும் நாம் இந்தியா முழுவதற்கும் உருவாக்க நினைக்கும் கூட்டாட்சி வெல்ல வேண்டும் என்றால் அனைவரும் எல்லைகளை மறந்து ஒன்றிணைய ேவண்டும் என்பதற்கான அடையாளம் தான் நீங்கள் என்னை அழைப்பதும் நான் இங்கு வருவதும்.

இது கேரளாவில் நடக்கும் மாநாடாக இருந்தாலும் இந்தியா முழுவதும் கூட்டாட்சி உருவாகவேண்டும் என்பதும் மாநிலத்தில் சுயாட்சி மலரவேண்டும் என்பதும் இந்தியா முழுவதற்குமான தத்துவமாகும். நான் ஏதோ தமிழ்நாட்டை காப்பதற்காக மட்டுமோ பினராய் விஜயன் கேரளாவை காப்பாற்றுவதற்கு மட்டுமோ இந்த முழக்கத்தை முன் வைக்கவில்லை. இந்தியாவை காப்பாற்றவேண்டுமானால் முதலில் மாநிலங்கள் காப்பாற்றப்படவேண்டும். மாநிலங்கள் காப்பாற்றப்பட்டால் தான் இந்தியா காப்பாற்றப்படும். நான் தமிழகத்தின் முதல்வராக இருக்கிறேன். பினராய் விஜயன் கேரள முதல்வராக இருக்கிறார். நமக்கு எந்த பிரச்னையும் இல்லை என்று நினைக்க முடியாது. இந்தியா முழுவதற்கும் கூட்டாட்சி, மாநில சுயாட்சி, மதசார்பின்மை, சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம், மற்றும் சமூக நீதியை நிலைநாட்ட நாம் கண்டிப்பாக குரல் கொடுத்தாகவேண்டும். அது வெறும் குரலாக மட்டும் இருக்க முடியாது.

தனித்தனி குரலாக இருந்தாலும் பயனில்லை. கூட்டு குரலாக கூட்டணியின் குரலாக அமையவேண்டும். எத்தகைய உன்னதமான தத்துவமாக இருந்தாலும் அது வெற்றி பெற அந்த தத்துவத்தை ஏற்றுக்கொண்ட சக்திகளின் ஒற்றுமை மிக மிக அவசியமாகும். அத்தகைய ஒற்றுமை ஓரிரு மாநிலங்களில் மட்டும் உருவானால் போதாது அனைத்து மாநிலங்களிலும் உருவாகவேண்டும். மாநில சுயாட்சி கொள்கை கொண்டதாக இந்திய அரசியல் அமைப்பு சட்டம் திருத்தப்படும் வரையில் நமது முழக்கத்தையும் செயலையும் தொடர்ந்து செய்தாக வேண்டும். கடந்த 13 ஆண்டுகளாக நமது கூட்டாட்சி செயல்படும் தன்மை மாநிலங்கள் இடையே விரக்தி உணர்வை தோற்றுவித்துள்ளது என்பதுதான் என் குற்றச்சாட்டு. மாநிலங்கள் சுங்க ெதாகை வசூலிக்கக்கூடிய சாதாரண நகராட்சி அமைப்புகளை போல மாறி வருகின்றன. அவை இருக்கும் இடம் தெரியாமல் பின்னணிக்கு தள்ளப்பட்டுள்ளன.

அதிக அதிகாரங்கள் தரப்படவேண்டும் என்ற இயற்கையான உணர்வுகள் மாநிலங்களிடம் தோன்றியுள்ளன. ஒன்றிய அதிகார பட்டியல், மாநில அதிகார பட்டியல், பொது பட்டியல் என வைத்துள்ளார்களே தவிர அனைத்தையும் ஒன்றிய அதிகாரங்களாகவே கருதுகிறார்கள். பொது பட்டியல் என்பது முழுக்க முழுக்க ஒன்றிய பட்டியலாக மாறி வருகிறது. மாநில அதிகாரங்களையும் மடை மாற்றம் செய்து வருகிறார்கள். சரக்கு மற்றும் சேவை வரி மூலம் நிதி உரிமை பறிக்கப்பட்டுவிட்டது. இதனை நிதி உரிமை பறிப்பாக மட்டும் கருதவில்லை. மாநிலங்களின் வளர்ச்சியை தடுப்பதாகவும் கருதுகிறேன். அதனால் தான் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். சுற்றுச்சூழல், தொழிலாளர் நலன், துறைமுகங்கள் என பல்வேறு சட்டங்கள் பா.ஜ அரசால் கொண்டுவரப்படுகின்றன. இவை மக்கள் விரோத சட்டங்களாகும், மாநில விரோத சட்டங்களாகவும் இருப்பதால்தான் அதனை எதிர்க்கிறோம்.

நேரடியாக செய்ய முடியாத அரசியல் தலையீடுகளை சட்டத்தின் போர்வையில் செய்ய பார்க்கின்றனர். ஆளுனர்கள் மூலம் பா.ஜ., இரட்டை ஆட்சியை நடத்த பார்க்கிறது. நமது எண்ணங்களை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் எழுப்பினால் அதற்குரிய பதில் கூட தரப்படுவதில்லை. நமக்கான உரிமையை நிலைநாட்ட கடிதம் அனுப்பினால் அதற்கான பதில் கூட ஒன்றிய அரசிடம் இருந்து வருதில்லை. மாநிலங்கள் வெறும் கையை பிசைந்துகொண்டு நிற்கின்றன. இது திமுக, மார்க்சிஸ்ட் ஆளும் மாநிலங்களை மட்டுமல்லாமல் பா.ஜ. ஆளும் மாநிலங்களுக்கும் சேர்த்துதான் குரல் கொடுக்கிறோம். எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் மட்டுமல்லாமல் பா.ஜ. ஆளும் மாநிலங்களும் நெருக்கடிக்கு உள்ளாகி வருகின்றன. ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே உணவு, ஒரே தேர்வு, ஒரே கல்வி, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே கலாசாரம் என்று எல்லாவற்றையும் ஒரே ஒரே ஒரே என்று கோரஸ் பாடுகின்றனர்.

இப்படியே போனால் ஒரே கட்சி என்று ஆகிவிடும். ஒரே கட்சியானால் ஒரே ஆள் என்று ஆகிவிடும். இதை விட ஆபத்தானது வேறு இருக்க முடியாது. ஒரே கட்சி என்று ஆகும்வரை பா.ஜ.வினர் மகிழலாம், ஒரே ஆள் என்று ஆகும்போது நம்மோடு சேர்ந்து பா.ஜ.வினரும் அதை எதிர்த்துதான் ஆகவேண்டும். இத்தகைய எதேச்சாதிகாரத்திற்கு எதிரான குரல்தான் மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்பதாகும்.  மதவாத வகுப்புவாத சாதீய வாத எதேச்சாதிகார ஒற்றை தன்மை கொண்ட இந்தியாவை பா.ஜ.வால் உருவாக்க முடியாது. அதனை இந்திய மக்கள் அனைவரும் எதிர்ப்பார்கள். தமிழகம், கேரளா மட்டுமல்லாமல் அனைத்து மாநிலங்களும் இதனை எதிர்க்கும் காலம் நெருங்கி வருகிறது. சுயாட்சி தன்மை கொண்டவையாக மாநிலங்கள் இருப்பதை ஒருமைப்பாட்டிற்கு விரோதம் என்று  மாற்றி சொல்கிறார்கள்.

நாம் கேட்பது மாநிலங்களுக்கு அதிக அதிகாரம்தான் தவிர பிரிவினை மாநிலங்கள் அல்ல. இந்திய அளவில் கூட்டாட்சியை ஒப்புக்கொள்பவர்களால் கேட்கப்படுவதுதான் மாநிலத்தில் சுயாட்சி.   மக்களை பிரிக்க பிறந்ததுதான் பா.ஜ. அவர்களது அரசியல் சுய நலத்திற்காக மக்களை பிரிக்க எண்ணுகிறார்கள். இந்த அரசியல் உள்நோக்கம் செல்லுபடியாகாது. தென்னகத்தில் திருவனந்தபுரத்தில் ஒலிக்கும் இந்த ஒற்றை குரல் இந்தியா முழுவதும் எதிரொலிக்கும் காலம் நெருங்கி வருகிறது. அந்த காலம் இந்தியா முழுவதற்குமான கூட்டாட்சியை உருவாக்கம் காலமாக அமையும். என்னை இந்த மாநாட்டில் பங்கேற்க அழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துகொள்கிறேன். இந்த ேதாழமை உணர்வை எல்லா மாநிலங்களிலும் உருவாக்க தேசிய கட்சிகளை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: