கைது செய்வதை தடுக்க தீக்குளிப்பேன் என போலீசாரை மிரட்டிய ரவுடியின் தாய் கைது

அண்ணாநகர்: அரும்பாக்கம் ராமசாமி ராஜா தெருவை சேர்ந்தவர் வினோத். பிரபல ரவுடியான இவர் மீது 2 கொலை வழக்குகள் உட்பட 8 வழக்குகள் உள்ளன. நேற்று முன்தினம் வினோத் அப்பகுதியில் சென்ற பொதுமக்களிடம், தகராறு செய்து மிரட்டுவதாக அமைந்தகரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு  போலீசார் வந்தபோது, ரவுடி வினோத் தனது வீட்டுக்குள் சென்று பதுங்கிக்கொண்டார். போலீசார் அவரை பிடிக்க முயன்றபோது ரவுடியின் தாய் லதா (56), வாசலில் போலீசாரை தடுத்து நிறுத்தி மறித்துள்ளார். மேலும், அங்கிருந்த மண்ணெண்ணெயை எடுத்து தனது உடலில் ஊற்றிக்கொண்டு, ‘‘நீங்கள் இங்கிருந்து செல்லவில்லை என்றால், நான் தீக்குளிப்பேன்’’ என மிரட்டியுள்ளார்.

தடுத்த உதவி ஆய்வாளர் குமார் மற்றும் போலீசார் மீதும் மண்ணெண்ணெய்யை ஊற்றினார்.  இதனால், அதிர்ச்சியடைந்த போலீசார் அங்கிருந்து திரும்பி சென்றனர். இதுகுறித்து அமைந்தகரை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் குமார்  புகார் கொடுத்தார்.  அதன்பேரில், ரவுடியின் தாய் லதாவை போலீசார் கைது செய்து 4 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து, புழல் சிறையில் அடைத்தனர். தப்பியோடிய பிரபல ரவுடி வினோத்தை தேடி வருகின்றனர்.

Related Stories: