தொழிலதிபரை தாக்கி நகை, பணம் கொள்ளை கார் டிரைவர், தந்தை கைது

சென்னை: சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த தொழிலதிபர் பாஸ்கர், பொள்ளாச்சி  அருகே உள்ள ஆனைமலையில் நிலம் வாங்குவதற்காக, ரூ.33 லட்சத்துடன் சொகுசு காரில் பொள்ளாச்சி நோக்கி கடந்த 28ம் தேதி புறப்பட்டார். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த மூலனூரில் இருந்து அரவக்குறிச்சி செல்லும் சாலையில் ஓசப்பாளையம் கிராமம் அருகே கார் சென்றபோது, நள்ளிரவு 12 மணியளவில் எதிர்திசையில் இருந்து காரில் வந்த மர்ம நபர், பாஸ்கர் வந்த காரை வழிமறித்து, அவரை இரும்பு கம்பியால் தாக்கினார். பின்னர், காரில் வைத்திருந்த ரூ.33 லட்சம்  மற்றும் 24 பவுன் நகைகளை பறித்து கொண்டு தப்பினார்.

இதுகுறித்த புகாரின் பேரில் மூலனூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அதில், பாஸ்கர் பயணித்த சொகுசு காரை ஓட்டி வந்த ஆக்டிங் டிரைவரான பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலையை சேர்ந்த பரத் என்பவரது கூட்டு சதியின் பேரில், பரத்தின் தந்தை குமார் என்பவர்,  தொழிலதிபரை தாக்கி பணம், நகையை கொள்ளையடித்தது தெரிய வந்தது. இதையடுத்து ஆனைமலை அம்மன் கார்டன் பகுதியைச் சேர்ந்த குமார் (48). அவரது மகனான ஆக்டிங் டிரைவர் பரத் (21) ஆகிய இருவரையும் தனிப்படையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.33 லட்சம் மற்றும் 24 பவுன் நகைகளை மீட்டனர்.

Related Stories: