ரவுடி கொலையில் 5 பேர் கைது தம்பியை வெட்டிக்கொன்ற நபரை 9 ஆண்டுக்கு பிறகு பழிதீர்த்தேன்: அண்ணன் பரபரப்பு வாக்குமூலம்

பெரம்பூர்: புளியந்தோப்பு காந்தி நகர் 8வது தெருவை  சேர்ந்தவர் கார்த்திகேயன் (எ) சேட்டு (33). இவர் மீது 2 கொலை உட்பட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இவர் நேற்று முன்தினம் இரவு புளியந்தோப்பு நெடுஞ்சாலை காந்திநகர் பேருந்து நிறுத்தம் பகுதியில் உள்ள பொதுக் கழிப்பிடம் அருகே அமர்ந்து, தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த 5 பேர், கார்த்திகேயனை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியது. இதுகுறித்து, புளியந்தோப்பு உதவி கமிஷனர் அழகேசன், பேசின் பிரிட்ஜ் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி உள்ளிட்டோர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், யானைகவுனி பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார் (40) முன்விரோத தகராறில் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து, கார்த்திகேயனை கொன்றது தெரிந்தது.  

இதையடுத்து, முக்கிய குற்றவாளி பிரேம்குமார் அவரது கூட்டாளிகள் புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த கார்த்திக் (எ) நாய்கடி கார்த்திக் (21), வியாசர்பாடி பி.கல்யாணபுரம் பகுதியை  சேர்ந்த குரு (எ) நரேஷ் குமார் (29), கொடுங்கையூர் சேலவாயல் பகுதியை சேர்ந்த சஞ்சய் (எ) சுகுமார் (19), சவுகார்பேட்டை பகுதியை சேர்ந்த  உப்புளி (எ) யுவராஜ் (26) ஆகிய 5 பேரை பேசின் பிரிட்ஜ் கைது  போலீசார்  செய்தனர். இதில், பிரேம்குமார் அளித்த வாக்குமூலமாக போலீசார் கூறியதாவது: கடந்த 2013ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது எனது தம்பி ரஞ்சித்தை ஏரியா பிரச்னையில்  கார்த்திகேயன் கொலை செய்தார்.

அதற்கு பழிவாங்கும் நோக்கில் பல ஆண்டாக கார்த்திகேயனை பின்தொடர்ந்து கொலை செய்ய திட்டமிட்டேன். ஆனால், சரியான தருணம் கிடைக்கவில்லை. கடந்த  மார்ச் மாதம் பேசின் பிரிட்ஜ் போலீசாரால் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு கடந்த 15ம் தேதி ஜாமீனில் வெளியே வந்த கார்த்திகேயன், சம்பவத்தன்று புளியந்தோப்பு நெடுஞ்சாலை காந்திநகர் பேருந்து நிறுத்தம் பகுதியில் உள்ள பொதுக் கழிப்பிடம் அருகே இருப்பது அறிந்து, கூட்டாளிகளுடன் அங்கு சென்று, வெட்டி கொலை செய்தேன். இவ்வாறு போலீசார் கூறினர்.

இதையடுத்து, 5 பேரையும் நீதிமன்றத்தில் அஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஏரியா பிரச்னையில் தனது தம்பியை கொன்றவனை  9 ஆண்டுகள் கழித்து அண்ணன் வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த கார்த்திகேயனுக்கு திருமணமாகி விஜயசாந்தி என்ற மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: