நடிகர் சங்கத்தில் இருந்து கே.பாக்யராஜ், நடிகர் உதயா நீக்கம்

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்தில்இருந்து கே.பாக்யராஜ், நடிகர்  ஏ.எல்.உதயா நீக்கப்பட்டுள்ளனர். தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கடந்த 2019ல் தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் கே.பாக்யராஜ் தலைமை யிலான சங்கரதாஸ் அணியும், நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும்  போட்டியிட்டன. பிறகு தேர்தல் நடந்தது. ஆனால், இந்த தேர்தல் செல்லாது என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதால்,  வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது. இதையடுத்து, நாசர், விஷால், கார்த்தி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கு நீதிபதிகள் புஷ்பா, சத்திய நாராயணா, முகமது ஷபீர் ஆகியோர் அமர்வுக்கு விசாரணைக்கு வந்திருந்த நிலையில், இந்த தேர்தல் செல்லும் என்றும், வாக்கு எண்ணிக்கை நடத்தலாம் என்றும் உயர் நீதிமன்றம் சில மாதங்களுக்கு முன்பு தீர்ப்பு வழங்கியது.

இதையடுத்து கடந்த மார்ச் 20ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதில் தலைவராக நாசர்,பொதுச்செயலாளராக விஷால், பொருளாளராக கார்த்தி தேர்ந்தெடுக்கப்பட்டனர். பாண்டவர் அணி சார்பாக துணைத் தலைவருக்கான பதவிக்கு போட்டியிட்ட பூச்சி முருகன், கருணாஸ் ஆகியோர் வெற்றிபெற்றனர். தலை வர், பொதுச்செயலாளர், பொருளாளர், துணைத்தலைவர்கள் ஆகிய 5 பதவிகளையும் பாண்டவர் அணி கைப்பற்றியது. இந்நிலையில், நடிகர் சங்க புதிய நிர்வாகிகளின் நன்மதிப்பை கெடுக்கும் வகையில் செயல்பட்டதாக  கே.பாக்யராஜ், நடிகர் ஏ.எல்.உதயா மீது புகார் கூறப்பட்டது.

இது குறித்து செயற்குழு முடிவுஎடுத்து, ‘சங்க உறுப்பினர் பதவியில் இருந்து உங்களை ஏன் நீக்கக்கூடாது?’ என்று விளக்கம் கேட்டு உடனே ஒரு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்நிலையில் நடிகர் சங்க விதியின்படி, உறுப்பினருக்கு எதிராக செயல்பட்ட  காரணத்துக்காக இயக்குனர் கே.பாக்யராஜ், நடிகர் ஏ.எல்.உதயா ஆகிய இருவரும் 6 மாதங்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது திரை வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: