கேரள முன்னாள் அமைச்சர் கோடியேரி பாலகிருஷ்ணன் காலமானார்

சென்னை: மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளரும், முன்னாள்  அமைச்சருமான கோடியேரி பாலகிருஷ்ணன் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். கேரள மாநில மார்க்சிஸ்ட் கட்சியின் செயலாளராகவும் ெபாலிட் பீரோ உறுப்பினராகவும் இருந்தவர் கோடியேரி பாலகிருஷ்ணன் (68). அச்சுதானந்தன் அமைச்சரவையில்  கேரள உள்துறை அமைச்சராகவும் பணியாற்றினார். ெதாடர்ந்து மூன்றாவது முறையாக மாநிலசெயலாளராக கோடியேரி தேர்வு செய்யப்பட்டார். ஆனால் உடல்நலகுறைவால் பதவியில் இருந்து விலகினார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர் சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் நேற்று காலமானார்.

கோடியேரி பாலகிருஷ்ணன், 1973ல் திருவனந்தபுரத்திலுள்ள கேரள பல்கலைக்கழக கல்லூரியில் படித்தபோது இந்திய மாணவர் கூட்டமைப்பு (எஸ்எப்ஐ) மாநில செயலாளர் ஆனார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் பகுதி செயலாளர் பதவியில் தொடங்கி கடைசியில் இக்கட்சியின் மாநில செயலாளர் பதவி வரை அடைந்தார். 1988ல் மாநிலக் கமிட்டி உறுப்பினராகவும், 1995ல் மாநில செயற்குழு உறுப்பினராகவும், 2002ல் மத்தியக் கமிட்டி உறுப்பினராகவும், 2008ல் பொலிட் பீரோ உறுப்பினராகவும் இருந்தார். 1982ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் தலச்சேரி தொகுதியில் போட்டியிட்டு இவர் வெற்றி பெற்றார். இதன்பின் 1987, 2001 2006 மற்றும் 2011ம் ஆண்டுகளில் நடந்த தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2006 முதல் 2011 வரை  அச்சுதானந்தன் அமைச்சரவையில் உள்துறை மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்தார். இவருக்கு வினோதினி என்ற மனைவியும், பினோய், பினீஷ் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர்.

மு.க.ஸ்டாலின் இரங்கல்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், ‘‘சி.பி.ஐ.எம் தலைமைக் குழு உறுப்பினரும், மூன்று முறை அக்கட்சியின் மாநிலச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவருமான கோடியேரி பாலகிருஷ்ணனுக்கு இறுதி மரியாதை செலுத்தினேன். கொள்கை உறுதிமிக்க தலைவராக விளங்கிய கோடியேரி பாலகிருஷ்ணன், 1975ம் ஆண்டு நெருக்கடி நிலையின் போது மிசா சட்டத்தின் கீழ் சிறைத்தண்டனை அனுபவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களுக்கும் எனது இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என கூறியுள்ளார்.

Related Stories: