வீட்டு உபயோக சிலிண்டர் விலை குறையவில்லை வர்த்தக காஸ் விலை ரூ.35.50 குறைப்பு; சென்னையில் ரூ.2,009 என நிர்ணயம்

சேலம்: நாடு முழுவதும் வீடுகளில் பயன்படுத்தும் காஸ் விலை குறைக்கப்படாத நிலையில், கடைகளில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடை கொண்ட வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.35.50 குறைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயித்து வருகிறது. இந்நிலையில், இம் மாதத்திற்கான (அக்டோபர்) புதிய விலையை நேற்று அதிகாலை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு வெளியிட்டது. அதில் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. இதனால் சென்னையில் ரூ.1,068.50, சேலத்தில் ரூ.1,086.50 ஆக நீடிக்கிறது. 19 கிலோ எடை கொண்ட வர்த்தக காஸ் சிலிண்டர் விலையை பொறுத்தவரை, நடப்பு மாதத்திற்கு ரூ.35.50 குறைக்கப்பட்டுள்ளது.  

இதனால் சென்னையில் ரூ.2,045 இருந்து ரூ.2009.50ஆக குறைந்துள்ளது. சேலத்தில் ரூ.1,998.50ல் இருந்து ரூ.1963 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் டெல்லியில் ரூ.1,859, மும்பையில் ரூ.1,811.50, கொல்கத்தாவில் ரூ.1,959 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை நகரங்களுக்கு இடையே வேறுபட்டுள்ளது. அதன்படி மும்பையில் ரூ.33, கொல்கத்தாவில் ரூ.36.50, டெல்லியில் ரூ.25.50 என குறைக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் மட்டும் வர்த்தக சிலிண்டர் விலை 6வது முறையாக குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல், மக்கள் அதிகம் பயன்படுத்தும் வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலையையும் குறைக்க வேண்டும் என்று ஒன்றிய அரசை அனைவரும் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: