கர்நாடக முதல்வருக்கு எதிராக பே-சிஎம் டி-சர்ட் அணிந்த வாலிபருக்கு போலீஸ் அடி; ராகுல் பாத யாத்திரையில் பரபரப்பு

சாம்ராஜ்நகர்: ராகுல் பாதயாத்திரையில், கர்நாடக முதல்வருக்கு எதிராக பே-சிஎம் டி-சர்ட் அணிந்து வந்த வாலிபரை போலீசார் அடித்து உதைத்து டி-சர்ட்டை கழற்றி கைது சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமாரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்திரை நடத்தி வரும் ராகுல்காந்தி, நேற்று முன்தினம் கர்நாடக மாநிலம், சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் யாத்திரையை தொடங்கினார்.

அப்போது, விஜயபுரா மாவட்டத்தை சேர்ந்த அக்‌ஷய்குமார் என்ற வாலிபர், அரசு ஒப்பந்தங்களில் 40% கமிஷன் கேட்கும் விவகாரத்தில் முதல்வர் பொம்மை உருவத்துடன், பே-சிஎம் என்ற வாசகம் பதித்த டி-சர்ட் அணிந்து இருந்தார். இதை பார்த்த போலீசார், அந்த வாலிபரை அடித்து இழுத்து சென்றனர். அப்போது, டி-சர்ட்டை கழற்ற சொல்லி முதுகில் ஒரு போலீஸ் அதிகாரி பலமுறை குத்துகிறார். பின்னர், அந்த டி-சர்ட்டை கழற்றி வாலிபரை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பான வீடியோவை டிவிட்டரில் பகிர்ந்துள்ள சித்தராமையா, ரவுடி போலீசை சஸ்பெண்ட் செய்ய வேண்டுமென வலியுறுத்தி உள்ளார்.

Related Stories: