7-வது மாதமாக தொடர்ந்து சாதனை; ஜிஎஸ்டி வசூல் ரூ.1.47 லட்சம் கோடி: ஒன்றிய அரசு தகவல்

புதுடெல்லி: நாடு முழுவதும் ஒரே மாதிரி வரி விதிக்கும் ஜிஎஸ்டி எனும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த 2017ல் அறிமுகப்படுத்தப்பட்டது. கொரோனா பாதிப்புகள் முடிவுக்கு வந்த பிறகு கடந்த சில மாதங்களாக ஜிஎஸ்டி வசூல் தொடர்ந்து ஏறுமுகமாக இருந்து வருகிறது. இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் தொடர்பாக ஒன்றிய நிதி அமைச்சகம் நேற்று விடுத்த அறிக்கையில், ‘2022 செப்டம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சத்து 47 ஆயிரத்து 686 கோடியை எட்டி உள்ளது. இது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வசூலான ரூ.1.17 லட்சம் கோடியை விட 26 சதவீதம் அதிகமாகும்.

ஒன்றிய ஜிஎஸ்டி ரூ.25,271 கோடியும், மாநில ஜிஎஸ்டி ரூ.31,813 கோடியும் வசூலாகி உள்ளது. ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.80,464 கோடி ஆகும். இதில், சரக்கு இறக்குமதி மூலம் ரூ.41,215 கோடி வசூலாகி உள்ளது. செஸ் வரியாக ரூ.10,317 கோடி வசூலாகி உள்ளது’ என கூறப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதத்திற்கான ஜிஎஸ்டி ரூ.1.42 லட்சம் கோடியை எட்டி சாதனை படைத்தது. அதிலிருந்து தொடர்ந்து 7வது மாதமாக ஜிஎஸ்டி வசூல் ஒவ்வொரு மாதமும் ரூ.1.40 லட்சம் கோடியை தாண்டி வசூலாகி வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆகஸ்ட் மாதம் ரூ.1.43 லட்சம் கோடி வசூலானது.

Related Stories: