நாட்டின் தூய்மையான நகரம் 6-வது முறையாக இந்தூர் தேர்வு; ஜனாதிபதி விருது வழங்கினார்

புதுடெல்லி: இந்தியாவின் தூய்மையான நகரமாக இந்தூர் 6வது முறையாக தேர்ந்தெடுக்கபப்ட்டுள்ளது. தூய்மையான நகரங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஆய்வு மற்றும் கணக்கெடுப்பு நடத்தி ஒன்றிய அரசு விருதுகள் வழங்கி வருகிறது. அதன்படி, ‘ஸ்வச் சர்வேக்ஷன் விருதுகள் 2022’ என்ற பெயரில் 4,354 நகரங்களில் தூய்மை, சிறப்பான செயல்பாடு போன்ற பல்வேறு பிரிவுகளில் முடிவுகளை ஒன்றிய அரசு அறிவித்து உள்ளது. அதன்படி, இந்தியாவின் தூய்மையான நகரமாக 6வது முறையாக மத்தியபிரதேசத்தின் இந்தூர் தேர்தெடுக்கப்பட்டுள்ளது. 2ம் இடத்தை குஜராத்தின் சூரத்தும் தக்க வைத்து கொண்டன. 3வது இடம் நவி மும்பையும் பிடித்து உள்ளது. சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களின் பிரிவில், மத்தியப் பிரதேசம் முதல் இடத்தையும், சட்டீஸ்கர் மற்றும் மகாராஷ்டிரா முறையே 2வது மற்றும் 3வது இடங்களை பிடித்துள்ளன.

1 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகையில் ஹரித்வார் தூய்மையான கங்கை நகரமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. வாரணாசி மற்றும் ரிஷிகேஷ் முறையே அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர். ஒரு லட்சத்திற்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட கங்கை நகரங்களில் பிஜ்னோர் முதல் இடத்தைப் பிடித்தது. கன்னோஜ் 2வது இடமும், கர்முக்தேஷ்வர் 3வது இடத்தையும் பிடித்தது. இந்த நகரங்களுக்கு ஜனாதிபதி  திரவுபதி முர்மு நேற்று விருதுகளை வழங்கினார். நிகழ்ச்சியில், ஒன்றிய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி  மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: