நாட்டிற்கு எதிரான பதிவுகளால் பாக். அரசின் டிவிட்டர் இந்தியாவில் முடக்கம்

புதுடெல்லி: இந்தியாவில் பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கு முடக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தான் அரசு ‘GovtofPakistan’ என்ற பெயரில் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கை வைத்துள்ளது. இதன் மூலமாக அந்நாட்டு அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பாகிஸ்தான் அரசின் டிவிட்டர் கணக்கு நேற்று திடீரென முடக்கப்பட்டது. அதில், சட்டப்பூர்வ கோரிக்கையை ஏற்று இக்கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக டிவிட்டர் தெரிவித்துள்ளது. ஏற்கனவே பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு எதிராக வெறுப்பை பரப்பும் வகையில் தகவல்களை வெளியிட்ட ஏராளமான யூடியூப் சேனல்களுக்கு ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது.

 இப்படிப்பட்ட சூழலில் பாகிஸ்தானின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் எதற்காக முடக்கப்பட்டது என்பது குறித்து அரசு தரப்பில் எந்த அறிவிப்பும் தெரிவிக்கப்படவில்லை. இதுதொடர்பாக டிவிட்டர் நிர்வாகம் அளித்த பதிலில், ‘நாட்டிற்கு எதிரான பதிவுகளை வெளியிட்ட டிவிட்டர் கணக்குகளை தடை செய்யக் கோரி கடந்த ஆண்டு உலகம் முழுவதும் 326 சட்ட ரீதியான கோரிக்கைகள் வந்தன. அவற்றில் இந்தியாவில் இருந்து மட்டும் 114 கோரிக்கைகள் வந்துள்ளன. அப்படிப்பட்ட சட்டப்பூர்வ கோரிக்கையை ஏற்று பாகிஸ்தானின் டிவிட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது’ என கூறி உள்ளது. இதற்கு முன், கடந்த ஜூலை மாதமும் பாகிஸ்தான் அரசின் டிவிட்டர் கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டது பின்னர் மீண்டும் செயல்படத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

Related Stories: