ஆயுத பூஜை தொடர் விடுமுறை; அரசு பஸ்களில் 2.77 லட்சம் பேர் பயணம்

சென்னை: ஆயுத பூஜை தொடர் விடுமுறை காரணமாக அரசு பஸ்களில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 2.77 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர் என போக்குவரத்துத்துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் சென்னையில் வசித்து வருகிறார்கள். இவர்கள் ஒவ்வொரு தொடர் விடுமுறையின் போதும் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அந்தவவகையில் ஆயுதபூஜை, விஜயதசமி ஆகிய பண்டிகைகள் வரும் அக்.4, 5ம் தேதிகளில் கொண்டாடப்படுகின்றன. இதற்காக ஊருக்குச் செல்ல விரும்பும் பெரும்பாலான அரசு ஊழியர்கள், மாணவர்கள், உள்ளிட்டோர், இடையில் இருக்கும் நாளை (அக்.3) ஒரு நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு, நேற்று முன்தினம் முதலே பயணிக்கத் தொடங்கி விட்டனர்.

இவர்களின் வசதிக்காக கடந்த 2 நாட்களாக (செப்.30, அக்.1) சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகள் மற்றும் சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 3,500க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டன. இதன் மூலமாக 2.77 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணித்துள்ளனர். போதுமான அளவு பேருந்துகள் இயக்கப்பட்டதால் பொதுமக்கள் சிரமம் இல்லாமல் சொந்த ஊர்களுக்கு சென்றனர். இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்துத்துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ‘ஆயுத பூஜை தொடர் விடுமுறை காரணமாக சொந்த ஊர்களுக்கு செல்வோரின் வசதிக்காக கடந்த இரண்டு நாட்களாக வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் சேர்த்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

நேற்று (நேற்று முன்தினம்) கூட்டம் அதிகமாக இருந்தது. அப்போது 1.62 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணித்து இருந்தனர். ஆனால் இன்று (நேற்று) பயணிகளின் எண்ணிக்கை சற்று குறைவாக இருந்தது. இன்று (நேற்று) அரசு பஸ்களில் 1.15 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணித்தனர். இரண்டு நாட்களுக்கும் ஒட்டுமொத்தமாக சேர்த்து 2.77 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்’ என்றார்.

Related Stories: