ஜிஎஸ்டி நிலுவை தொகையை தமிழகத்துக்கு உடனே தர வேண்டும்; ஒன்றிய அமைச்சரிடம், தமிழக நிதியமைச்சர் வலியுறுத்தல்

புதுடெல்லி: தமிழகத்துக்கு தராமல் நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி நிலுவை ெதாகையை உடனே விடுவிக்க வேண்டும்  என்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், மூன்று நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஐன் வலியுறுத்தி உள்ளார்.

தமிழக அரசு சென்னை மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக 2ம் கட்ட ரயில்வே பணிகள் வேகமெடுத்துள்ளன. அதற்கான நிதியை தமிழக அரசு ஏற்கனவே அளித்துள்ள நிலையில், ஒன்றிய அரசு இதுவரை வழங்காமல் தாமதித்து வருகிறது. மேலும், ஜிஎஸ்டி கூட்டத்தை மதுரையில் கூட்ட வேண்டும் என்ற தமிழகத்தின் கோரிக்கையும், ஜிஎஸ்டி நிலுவை ெதாகையை உடனே விடுவிக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவும், பல்வேறு தரவுகளை கேட்கவும், மேலும், தமிழகத்தின் சார்பில் பல்வேறு துறை அமைச்சர்களை சந்தித்து எய்ம்ஸ் போன்ற தாமதமாகும் திட்டங்களை துரிதப்படுத்தவும், வெளிநாட்டு முதலீட்டுகளை உடனே தமிழகத்துக்கு கொண்டு வரும் திட்டங்களுக்கு வேகமாக அனுமதி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக , தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் மூன்று நாள் அரசு முறைப் பயணமாக டெல்லி சென்றுள்ளார்.

இந்நிலையில் அவர் நேற்று ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து  பேசினார். அப்போது தமிழக நிதி விவரங்கள், அரசின்பல்வேறு   திட்டங்கள் முடிப்பது, புதிய திட்டங்கள்குறித்தும் முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த பழனிவேல் தியாகராஜன் கூறியதாவது: ஒன்றிய நிதி அமைச்சருடன் பல்வேறு முக்கிய ஆலோசனைகள் நடத்தப்பட்டது. குறிப்பாக தமிழகத்தின் திட்டங்கள் மற்றும் கணக்குகள் குறித்து பேசப்பட்டது. இதைத்தவிர சென்னை மெட்ரோ ரயில் இரண்டாவது கட்டத்திற்கான கடன்களை பெறுவதற்கான ஒப்பந்தங்கள் உள்ளிட்டவை குறித்தும், அதற்கான அமைச்சரவையின் ஒப்புதல் வழங்காமல் இன்னும் நீடித்துக் கொண்டே தாமதமாகி வருகிறது. இதில் ஏற்கனவே தமிழக அரசு தனது தரப்பு நிதியினை செலுத்தி விட்டது. அதனால், ஒன்றிய அரசின் சார்பில் மீதம் இருக்கக்கூடிய பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த மாதத்திற்குள் கடன்களை பெறுவதற்கான ஒப்பந்த பணிகளை முடிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என ஒன்றிய நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.  

இதைத்தொடர்ந்து 50 ஆண்டுகளுக்கு வட்டி இல்லா கடனாக அனைத்து மாநிலங்களுக்கும் ஒரு லட்சம் ரூபாய் கோடி கடன் உதவி வழங்கும் ஒன்றிய அரசின் திட்டத்தின் கீழ் ரூ.3500 கோடி தற்போது தமிழகத்திற்கு வெள்ளிக்கிழமை(நேற்று முன்தினம்) விடுவிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இதேப்போன்று முன்னதாக ஆப்டிக்கல் கேபிள் திட்டத்திற்கு ரூ.184கோடியும், ஊரக நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.3263கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் கர்நாடகா மாநிலத்திற்கு வழங்கப்பட்டது போன்று பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு மற்றும் வருமான வரி ஆகியவற்றின் தரவுகளை தமிழகத்திற்கும் உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதுகுறித்த வரைவும் கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக ஒன்றிய நிதி அமைச்சகத்திடம் வழங்கியுள்ளோம் என கூறினோம். இதனையும் இந்த மாத இறுதிக்குள் முடித்து தருவதாக ஒன்றிய அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

இதையடுத்து தமிழகத்தில் நைப்பர் திட்டத்திற்கு நிதி ஒதுக்காமல் கால தாமதம் செய்யப்படுகிறது என தெரிவித்தோம். அதற்கு பதிலளித்த ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அந்த திட்டத்தை ஒன்றிய அரசே கைவிட்டு விட்டது என தெரிவித்தார். அப்படியென்றால் நைமர் திட்டத்தை மதுரையில் கொண்டு வர வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதனை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து ஆகஸ்ட் மாதமே ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்று இருக்க வேண்டும். ஆனால் செப்டம்பர் மாதம் ஆகியும் நடைபெறவில்லை. அதனால் ஜி.எஸ்.டி கூட்டத்தை உடனடியாக நடத்த வேண்டும். மேலும் தமிழகத்திற்கு என்று தற்போது வரையில் இருக்கும் ஜி.எஸ்.டி நிலுவை தொகையை விரைந்து விடுவிக்க வேண்டும் என ஆலோசனையின் போது தெரிவித்தோம். மேலும் கூட்டத்தில் விவாதிக்கப்படும் அம்சங்கள் குறித்தும் பேசப்பட்டது என்றார்.

இதையடுத்து ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது, ‘‘ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தை உடனடியாக மதுரையில் நடத்த முடியவில்லை என்றாலும், மூன்று மாதத்திற்கு ஒருமுறை கூட்டத்தை நடத்த வேண்டும் என்ற விதிமுறையின் அடிப்படையில் உடனடியாக ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் நடத்துவது தொடர்பான நடவடிக்கை எடுக்கப்படும். இருப்பினும் மதுரையில் நிச்சயமாக ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் நடைபெறும். அதில் எந்தவித மாற்றமும் கிடையாது’’ என ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Related Stories: