×

சங்கத்தை பற்றி பொய்யான கருத்து!: நடிகர் சங்கத்தில் இருந்து பாக்யராஜ் மற்றும் உதயா ஆகியோர் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்..!!

சென்னை: நடிகர் சங்கத்தில் இருந்து கே.பாக்யராஜ் மற்றும் உதயா ஆகியோர் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 6 மாத காலத்துக்கு நடிகர் கே.பாக்யராஜ் மற்றும் உதயா ஆகியோரை நடிகர் சங்கத்திலிருந்து நீக்கியுள்ளனர். சங்கத்தை பற்றி தவறான தகவலை பரப்பியதற்காக விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பிய நிலையில் நீக்கப்பட்டுள்ளனர். 2019 நடிகர் சங்க தேர்தலில் நாசர் தலைமையில் பாண்டவர் அணியும், பாக்யராஜ் தலைமையில் சங்கரதாஸ் அணியும் போட்டியிட்டது. நடிகர் சங்க தேர்தலை நடத்தக்கூடாது என பல குழப்பங்கள் அந்த நேரத்தில் நிலவியது; இருந்தாலும் 2019 ஜூனில் தேர்தல் நடந்தது.

நடிகர் சங்க தேர்தல் நடந்தாலும், வாக்கு எண்ணிக்கையை நடத்தக்கூடாது என ஐகோர்ட் தடை விதித்திருந்தது. வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்கப்பட்டதால், இரண்டரை ஆண்டுகள் வாக்குகள் எண்ணப்படாமல் இருந்தன. கடந்த மார்ச் 20ல் நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகள் ஐகோர்ட் உத்தரவுப்படி எண்ணப்பட்டன. தேர்தலில் நாசர் தலைமையிலான அணி வெற்றி பெற்று விஷால், கார்த்தி உள்ளிட்ட பாண்டவர் அணியினர் பதவியேற்றனர்.

நடிகர் கே.பாக்யராஜ் நீக்கம் ஏன்?:

புதிதாக பொறுப்பேற்ற நிர்வாகம், தேர்தல் பற்றி பொய்யான கருத்துக்களை பரப்பி வருவதாக ஆகஸ்டில் கே.பாக்யராஜ்க்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு கடிதம் மூலம் உண்மைக்கு மாறான கருத்துக்களை பரப்பியதாக கே.பாக்யராஜ் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து நடிகர் சங்க உறுப்பினர் பதவியில் இருந்து உங்களை ஏன் நீக்க கூடாது என விளக்கம் கேட்டு கே.பாக்யராஜ்க்கு கடிதம் அனுப்பப்பட்டது. 15 நாட்களுக்குள் விளக்கம் தர வேண்டும் என சங்கத்தின் சார்பாக ஆகஸ்ட் 22ல் கடிதம் அனுப்பப்பட்டது.

நடிகர் சங்கத்தின் முன்னாள் செயற்குழு உறுப்பினர் ஏ.எல்.உதயாவுக்கும் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டது. சங்கத்துக்கு எதிராக உறுப்பினர்கள் யாரும் செய்தியாகவோ அல்லது கடிதம் வாயிலாகவோ கருத்து கூறக்கூடாது என விதி உள்ளது. சமீபத்தில் நடந்த தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவர் தேர்தலில் கே.பாக்யராஜ் வெற்றிபெற்று தலைவரானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Bhagyaraj ,Udaya , Election, Actors' Association, K. Bhagyaraj, Dismissal
× RELATED பாரதிராஜா, பாக்யராஜ், எஸ்.ஏ...