தமிழகத்தில் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். அமைப்பை காலூன்ற விடக்கூடாது; மாதர் சங்க நிர்வாகி வலியுறுத்தல்

கடலூர்: அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தமிழ் மாநில 16 ஆவது மாநாடு கடலூரில் நேற்று முன்தினம் துவங்கியது. இரண்டாவது நாளாக நேற்று பொது மாநாடு கொடியேற்றத்துடன் தொடங்கியது. மாநில தலைவர் வாலண்டினா தலைமை வகித்தார். அகில இந்திய பொதுச் செயலாளர் மரியம் தாவ்லே துவக்க உரையாற்றினார். கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா வாழ்த்தி பேசினார். பல்வேறு சவால்களை எதிர்கொண்டு சாதனை படைத்தவர்கள் மாநாட்டில் கௌரவிக்கப்பட்டனர். மாநாட்டில் அகில இந்திய பொதுச்செயலாளர் மரியம் தாவ்லே பேசியதாவது: கொரோனா நோய் தொற்று காலக்கட்டத்திலும் மாதர் சங்க நிர்வாகிகள் சிறப்பாக செயல்பட்டீர்கள். அந்த காலக்கட்டத்திலும் நாடு முழுவதும் 4 கோடி ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

இதன் மூலம் உணவு தானியங்கள் வினியோகம் குறைக்கப்பட்டு உள்ளது. இந்த உணவு தானியங்கள் எல்லாம் பதுக்கப்பட்டு உள்ளது. ஆகவே ரேஷன் கார்டு இல்லாத அனைவருக்கும் ரேஷன் கார்டுகள் வழங்கி பொருட்கள் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும். தமிழகத்தில் மைக்ரோ பைனான்ஸ் போன்ற கடன் கொடுக்கும் நிறுவனங்களால் பெண்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிகரித்து வருவதை தடுக்க வேண்டும். ஆனால் இதை பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ். போன்றவை நியாயப்படுத்துகிறது. அனைத்து மதத்திலும் மத கோட்பாடுகளை காட்டி பெண்களை அடிமையாக வைத்திருக்க விரும்புகிறார்கள். இதில் இருந்து பெண்கள் விடுபட வேண்டும். தமிழகத்தில் பா.ஜ.க.. ஆர்.எஸ்.எஸ் அமைப்பை காலூன்ற விட கூடாது. அவர்களை தோற்கடிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: