×

திமுக ஆட்சி அமைந்தவுடன் புதுப்பொலிவு பெரும் விருப்பாட்சி சமத்துவபுரம்: தமிழக முதல்வர், அமைச்சருக்கு நன்றி தெரிவிப்பு

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள விருப்பாட்சி பெரியார் நினைவு சமத்துவபுரம் ரூ.95 லட்சத்தில் புனரமைப்பு செய்யப்பட்டு, புதுப்பொலிவு பெற்று வருகிறது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் ஒன்றியத்துக்குட்பட்ட விருப்பாட்சி ஊராட்சியில் அமைந்துள்ளது பெரியார் நினைவு சமத்துவபுரம். தற்போது இந்த சமத்துவபுரம் புனரமைப்பு செய்யப்பட்டு புதுப்பொலிவு பெற்று வருகிறது.

கடந்த 1996-2001ம் ஆண்டு திமுக ஆட்சிகாலத்தில் அன்றைய தமிழக முதல்வர் கலைஞர், ஜாதி பேதமற்ற சமத்துவ சமுதாயமே எனது லட்சியம் என்ற அவரது கனவு திட்டமான, இத்திட்டம் 22.10.1997ம் நாள் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்பாடுக்கு கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து ஏற்றத்தாழ்வை இடித்து சமூகத்தை சமப்படுத்த வேண்டும் என்று போராடிய தந்தை பெரியாரின் கொள்கை முழக்கத்திற்கு ஏற்ப தமிழக முழுவதும் 240 சமத்துவபுரங்களை அமைத்தார்.
விருப்பாட்சியில் 100 வீடுகள் அமைப்பு இதன் ஒரு பகுதியாக ஒட்டன்சத்திரம் ஒன்றியம், விருப்பாட்சியில் கடந்த 1999ம் ஆண்டு பெரியார் நினைவு சமத்துவபுரத்தை திறந்து வைத்தார்.

தலா 3 சென்ட் நிலப்பரப்பில் 100 வீடுகள் என்று வரையறை செய்யப்பட்டு குடியிருப்புகள் ஒவ்வொன்றிலும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு 40 சதவீதமும், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 25 சதவீதமும், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 25 சதவீதமும், இதர பிரிவினர்களுக்கு 10 சதவீதமும் என வீடுகள் ஒதுக்கப்பட்டு, பொதுமக்கள் குடியிருந்து வந்தனர். சமத்துவபுரத்தில் அங்கன்வாடி மையம், நூலகம், சமூதாயக்கூடம், ரேசன் கடை, அரசு பள்ளி, பூங்கா, விளையாட்டு மைதானம், திருமண மண்டபம் உள்ளிட்ட வசதிகளுடன் பயன்பாட்டில் இருந்து வந்தது.

10 ஆண்டு ஆட்சியில் பராமரிப்பே இல்லை: கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் அதாவது 10 ஆண்டுகாலமாக சமத்துவபுரம் சரியாக பராமரிக்கப்படாமல் இருந்தது. அதன்பின் தற்போதைய திமுக ஆட்சி அமைந்தவுடன் சட்டமன்றத்தில் கடந்த 24.06.2021ம் தேதியில் சமத்துபுரங்கள் சீரமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இதையடுத்து கடந்த 30.03.2022ம் தேதி முதற்கட்டமாக 149 சமத்துவபுரங்களில் 14,880 வீடுகள் பழுதுபார்த்து புனரமைத்தல் பணிகள் மேற்கொள்ள அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி விருப்பாட்சி பெரியார் நினைவு சமத்துவபுரம் பராமரிப்பு, பழுது நீக்குதல், சாலை மேம்பாடு பணிகளுக்கான பூமி பூஜையை உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி துவக்கி வைத்தார். தொடர்ந்து கடந்த ஜூலை 19ம் தேதி மாவட்ட கலெக்டர் எஸ்.விசாகன் விருப்பாட்சி சமத்துவபுரம் புதுப்பிக்கும் பணியை நேரில் பார்வையிட்டு பணிகளை தரமானதாகவும், விரைவில் முடிக்க வேண்டும் என்று உத்திரவிட்டார்.

முதல்வர், அமைச்சருக்கு நன்றி: இதுகுறித்து ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அசோக் வேலுச்சாமி என்பவர் கூறியதாவது, ‘உணவு மற்றும் உணவுபொருள் வழங்கல்துறை அமைச்சர் அர.சக்கரபாணி விருப்பாட்சி ஊராட்சிக்கு பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்து வருகிறார். விருப்பாட்சியில் விடுதலை போராட்ட வீரர் கோபால்நாயக்கரின் நினைவாக கடந்த 2006- 2011ம் ஆண்டு ரூ.69 லட்சம் மதிப்பீட்டில் முழுஉருவ வெண்கல சிலையுடன் மணிமண்டபம் அமைக்கப்பட்டு, அவரது பிறந்தநாள் அரசு விழாவாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடபட்டு வருகிறது. விருப்பாட்சி ஆதிதிராவிடர் காலனி மக்களின் நீண்டகால கோரிக்கையான உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிக்கு நபார்டு திட்டதின்கீழ் ரூ.2.23 கோடி மதிப்பீடில் பணிகள் நடைபெற்று வருகிறது.

விருப்பாட்சி தலையூத்து அருவி சுற்றுலா தலமாக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் விரைவில் விருப்பாட்சியில் தொழிற்பயிற்சி பள்ளியும், போக்குவரத்து பணிமனை சொந்த இடத்தில் செயல்பட இருப்பதாக அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்துள்ளார். விருப்பாட்சி மக்களின் தேவைகளை அறிந்து திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலிவுக்கும், உணவு மற்றும் உணவுபொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணிக்கும் நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்’ என்றார்.

2 மாதத்தில் பணிகள் நிறைவு பெறும்: வட்டார வளர்ச்சி அலுவலர் காமராஜ் கூறியதாவது, விருப்பாட்சியில் சமத்துவபுரம் அமைக்கப்பட்டு 23 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. கடந்த பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி மிகவும் சேதமடைந்து நிலையில் காணப்பட்டது. தற்போது ரூ.95 லட்சம் மதீப்பிட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டு, இதில் வீடுகள் பராமரிப்பதற்காக ரூ.50 லட்சத்திலும், தெரு விளக்கு, சாலை வசதி, பள்ளி கட்டிடம் புனரமைப்பு செய்வதற்கு ரூ.45 லட்சத்திலும் பணிகள் நடைபெற்று வருகிறது. 2 மாதத்தில் பணிகள் அனைத்தும் நிறைவு பெற்று விடும். இவ்வாறு கூறினார்.

Tags : DMK government ,Puduppolivu ,Samathuvapuram ,Tamil ,Nadu ,Chief Minister ,Minister , Once the DMK government is formed, Puduppolivu will be a big option Samathuvapuram: Tamil Nadu Chief Minister, thanks to the Minister
× RELATED தினசரி மார்க்கெட் செயல்பட தொடங்கியது