ஆயுத பூஜைக்காக பொரி உற்பத்தி தீவிரம்: ஆர்டர்கள் குறைவால் ஆலை அதிபர்கள் கவலை

உடுமலை: நவராத்திரி விழா துவங்கி ஆயுத பூஜை நெருங்கி வரும் வேளையில் உடுமலை அருகே பொரி உற்பத்தி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை கொண்டாட்டங்களின்போது வீடுகள்,தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள், சிறு,குறு தொழிற்கூடங்கள்,கல்வி நிறுவனங்கள், கடைகள், வணிக நிறுவனங்கள் என அனைத்து தரப்பினரும் தங்களுடைய தொழிற்கருவிகளையும், நோட்டு, புத்தகம், பேனா, பென்சில் உள்ள கல்வி உபகரணங்களையும் வைத்து வழிபடுவது வழக்கம். குறிப்பாக ஆயுத பூஜையின்போது அவல், பொரி, கடலை சர்க்கரை பொங்கல், சுண்டல் என தினந்தோறும் நவராத்திரி கொலுவில் விதவிதமான பிரசாதங்களை வைத்து வழிபடுகின்றனர்.

அந்த வகையில் பொரி உற்பத்தியானது ஆயுத பூஜையின்போது களை கட்டும். திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி, செங்கப்பள்ளி, உடுமலை, குமரலிங்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் திண்டுக்கல் மாவட்டத்திலும் பொரி உற்பத்தி செய்யும் ஆலைகள் இயங்கி வருகிறது. வருகிற 3 மற்றும் 4ம் தேதி ஆயுத பூஜை விழா சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பொரி உற்பத்தி ஆலைகளில் பொரி உற்பத்தி மும்முரமாக நடந்து வருகிறது.

உடுமலை அடுத்துள்ள குமரலிங்கத்தில் கடந்த 30 ஆண்டுகளாக பொரி உற்பத்தி ஆலை நடத்தி வரும் ராஜகோபாலச்சாமி என்பவர் கூறியதாவது:

பொரி உற்பத்திக்காக கர்நாடக மாநிலம் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இருந்து பொரி அரிசியை இறக்குமதி செய்து, அதன் மூலம் பொரி உற்பத்தி செய்து வருகிறோம். கடந்த ஆனி மாதம் பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக மேற்கு வங்கம், கர்நாடக மாநிலங்களில் நெல் அறுவடை வெகுவாக பாதிக்கப்பட்டது. இதன் எதிரொலியாக பொரி அரிசி வரத்து குறைந்ததோடு விலையும் அதிகரித்தது. தற்போது ஒரு கிலோ அரிசி ரூ.40 வரை கொள்முதல் செய்யப்படுகிறது.

ஆண்டுதோறும் ஆயுதபூஜை காலங்களில் கோவை, பொள்ளாச்சி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, மதுரை மற்றும் கேரளாவில் சில இடங்களுக்கு நாள்தோறும் நூறு மூட்டை பொறி உற்பத்தி செய்து அனுப்புவது வழக்கம். இந்த முறை விலைவாசி உயர்வால் பொரிக்கான ஆர்டர்கள் குறைந்துவிட்டன. டீசல் விலை உயர்வு போக்குவரத்து செலவு, எரிபொருட்கள் விலை உயர்வு, மூலப்பொருட்களின் விலை உயர்வு, தொழிலாளர்களுக்கான கூலி இதன் காரணமாக பொரியின் விலையும் சற்றே உயர்ந்துள்ளது.

முன்பெல்லாம் திருப்பூர் மாவட்டம் முழுவதும் விசைத்தறிக்கூடங்களுக்கும், பஞ்சாலைகளுக்கும் பனியன் தொழிற்சாலைகளுக்கும் ஆயுத பூஜை கொண்டாட்டத்தின்போது ஆயிரம் மூட்டை பொரி அனுப்புவது வழக்கம். தற்போது பஞ்சு விலை உயர்வு பல விசைத்தறிக்கூடங்கள் மூடப்பட்டு விட்டன. இதனால் நவராத்திரி துவங்கி 5 நாட்களாகியும் இதுவரை  10 சதவீத ஆர்டர் மட்டுமே கிடைத்துள்ளது.

பொரி ஆலையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஆண்டுதோறும் தீபாவளி போனஸ் என்பது நவராத்திரி பண்டிகையின்போது களை கட்டும் வியாபாரத்தை கொண்டு வழங்கப்படுவது வழக்கம். இந்த முறை எதிர்பார்த்த அளவு ஆர்டர் இல்லாததால் போனஸ் வழங்குவது எவ்வாறு? என்று திகைப்பாக உள்ளது. விலைவாசி உயர்வு காரணமாக ஆலையில் பணியாளர் மற்றும் தொழிலாளர்களுக்கு பெண்களுக்கு தினமும் 350 ரூபாயும், ஆண்களுக்கு 600 ரூபாயும் கூலியாக வழங்கப்படுகிறது ஒரு மூட்டை பொறி 450 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. லாபம் கிடைக்காவிட்டாலும், நஷ்டம் இல்லாத அளவிற்கு 100 மூட்டை பொரி உற்பத்தி செய்தால் அதனை விற்பது வரை காத்திருக்கிறோம்.

இதனால் வேலைஇழப்பு, தொழிலாளர்களுக்கு வருவாய் பற்றாக்குறையும் ஏற்படுகிறது. ஒரு பக்கா பொரி பத்து ரூபாயிலிருந்து தற்போது 12 ரூபாயாக விலை உயர்த்தப்பட்டுள்ளது. முன்புபோல பொரியை விரும்பி வாங்குவோர் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.

முன்பெல்லாம் சந்தைகளுக்கு செல்வோர் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு நொறுக்கு தீனியாகவும், மாலை வேளைகளில் சிற்றுண்டியாகவும் பொரியை பக்கா கணக்கில் வாங்கி செல்வதுண்டு. நவீன யுகத்தில் பீட்சா, பர்கர், பாஸ்ட் புட் ஐட்டங்களை குழந்தைகள் விரும்புவதால் பொரி போன்ற சிறுதானிய உணவு உற்பத்தியும் சரி விற்பனையும் சரி பெரிய அளவில் சரிந்துள்ளது.

இதுபோல் தொழிற்சாலைகளிலும் பணியாற்றும் ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் ஆயுதபூஜையின்போது கிலோ கணக்கில் பொரி, அவல், சுண்டல் பிரசாதங்களை பார்சல் போட்டு வழங்குவது வழக்கம். தற்போது இவற்றை தொழிலாளர்களும் விரும்புவதில்லை. முதலாளிகளும் பிரசாத பைகளுக்கு பதில் பணமாகவே கொடுத்து விடுகின்றனர். பூஜையின்போது இலைக்கு மட்டுமே பொரி போதும் என்ற நிலை வந்துவிட்டதால், 100 கிலோ பொரி வாங்க வேண்டிய பெரிய நிறுவனங்கள்கூட ஒரு கிலோ பொரியுடன் நிறுத்திக் கொள்கின்றன.

இதனால் கொரோனா காலத்தில் இருந்த உற்பத்திகூட தற்போது இல்லை. குடிசைத் தொழிலாகிய பொரி உற்பத்தி தொடர்ந்து தொய்வின்றி நடைபெற, மின் கட்டண உயர்விலிருந்து பொரி ஆலைகளுக்கு அரசு விலக்களிக்க வேண்டும். குழந்தைகள் ஆரோக்கியமாக வளர நவதானிய உணவு, பொரி, அவல், கடலை போன்றவற்றை  சிற்றுண்டிகளாக பெற்றோர்கள் அவசியம் வழங்கிட முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: