நெல்லையப்பர் சாலை விரிவாக்க பணிகள் தீவிரம்: கடும் போக்குவரத்து பாதிப்பு

நெல்லை: நெல்லை டவுன் நெல்லையப்பர் நெடுஞ்சாலை பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், நேற்று ஆர்ச் அருகே பழமையான மரத்தின் கிளைகள் அகற்றப்பட்டன. சாலை பணிகள் காரணமாக சாலையில் கடும் போக்குவரத்து நெருக்கடி நிலவியது. நெல்லை டவுன் பகுதியில் நெல்லையப்பர் நெடுஞ்சாலை பணிகள் கடந்த சில தினங்களாக நடந்து வருகிறது. இச்சாலையை விரிவாக்கம் செய்வதோடு, சாலையின் ஓரப்பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. நேற்று சாலை விரிவாக்கத்திற்காக ஆர்ச் அருகே பழமைவாய்ந்த வேப்பமரத்தின் கிளைகள் வெட்டி அகற்றப்பட்டன. மேலும் ஆர்ச் தொடங்கி புரம் வரை சாலையில் தார் வைக்கும் பணிகளும் நடந்தன. இதனால் சாலையின் ஒருபுறமாக வாகனங்கள் செல்லும் நிலை ஏற்பட்டது.

நேற்று காலை தொடங்கி இரவு வரை நெல்லையப்பர் நெடுஞ்சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. போக்குவரத்து போலீசார் முழுவீச்சில் களமிறங்கி, வாகனங்களை ஒழுங்குப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். சாலை பணிகள் காரணமாக நேற்று காலாண்டு தேர்வு முடிந்து பள்ளியில் இருந்து வீடு திரும்பும் மாணவ- மாணவிகளும், அரசு அலுவலகங்களுக்கு செல்வோரும் கடும் அவதிக்குள்ளாகினர். சில வியாபாரிகள் நேற்று கடைகளை அடைத்துவிட்டு வீடு சென்றனர்.

நெல்லையப்பர் நெடுஞ்சாலையில் கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக பணிகள் நடந்து வரும் நிலையில், அப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: