தமிழகத்திலேயே 7.5 கி.மீ. தூரத்திற்கு மதுரையில் நீண்ட பறக்கும் பாலம்: திருச்சிக்கு 23 கி.மீ பயண தூரம் குறையும்

மதுரை: தமிழகத்திலேயே நீண்ட பறக்கும் பாலம் மதுரையில் 7.5 கி.மீ. தூரத்திற்கு அமைக்கப்படுகிறது. இப்பாலத்தில் இருந்து அழகர்கோவில் சாலை வழியாக மாட்டுத்தாவணிக்கு பாதை அமைக்கும் பணி துவங்கி வேகமடைந்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு மே 7ம் தேதி தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் முதல்முறை பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் பதவியேற்ற காலகட்டம் தமிழகம் பெரும் தள்ளாட்டத்தில் இருந்தது.

கொரோனா பெருந்தொற்று, பருவமழை பாதிப்புகள், நிதிச்சுமை என நெருக்கடிகள் அடுத்தடுத்து வந்தன. அவற்றே செம்மையாக ஒருபக்கம் கையாண்டு கொண்டே, மறுபுறம் மக்கள் நலத்திட்டங்களை அமல்படுத்தினார். அதுவும் முதல் நாளில் இருந்தே களப்பணியை தொடங்கி விட்டார். அவற்றில் சாலை மேம்பாட்டிற்காக செய்த விஷயங்கள் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளன. இதில் பல்வேறு திட்டங்கள் நாட்டிற்கே முன்னுதாரணமாக திகழ்கிறது.

மதுரை மாவட்டத்தில் மாநகர், திருமங்கலம், சோழவந்தான், வாடிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. குறிப்பாக மக்களின் அடிப்படை வசதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. சாலை விரிவாக்க பணிகள், பாதாள சாக்கடை பணிகள், வாறுகால் கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட பணிகள் கடந்த அதிமுக ஆட்சியில் ஆமை வேகத்தில் இருந்ததாகவும், தற்போது ராக்கெட் வேககத்தில் படுஜோராக நடந்து வருவதாகவும் மக்கள் கூறுகின்றனர்.

மதுரையில் இருந்து நத்தம் வரை 35 கி.மீ. சாலையை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஏற்று ரூ.1028 கோடியில் நான்குவழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் திட்டப்பணி கடந்த 2018 செப்டம்பரில் துவங்கியது. இதில் மதுரை சொக்கிகுளம் முதல் ஊமச்சிகுளம் வரை 7.5 கி.மீ. தூரம் ரூ.612 கோடியில் பறக்கும் பாலம் கட்டப்படுகிறது. ரூ.416 கோடியில் ஊமச்சிகுளம் முதல் நத்தம் வரை 28 கி.மீ. தூரம் நான்குவழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்படுகிறது. சாலை விரிவாக்க பணி பெரும் பகுதி முடிந்துள்ளது.

இந்த பறக்கும் பாலத்திற்காக மொத்தம் 225 தூண்கள் அமைக்கும் பணி 80 சதவீதம் முடிந்துள்ளது. கட்டுமான பணியில் நவீன தொழில்நுட்பம் கடைபிடிக்கப்பட்டுள்ளது. சாலை நெடுகிலும் ஒற்றைத்தூண்கள் கட்டி, ரெடிமேடு கான்கிரீட் தளம் மூலம் இணைக்கப்பட்டு வருகிறது. நாராயணபுரத்தில் பாலத்தின் மீது வாகனங்கள் ஏறி இறங்கும் வகையில் இரட்டை தூண்கள் அமைகின்றன. விரைவாக கட்டி முடிக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சொக்கிகுளத்தில் இருந்து அழகர்கோவில் சாலை வழியாக மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் செல்லும் வகையில் பாலத்தில் பாதை அமைக்கப்படுகிறது. இப்பாதை அமைக்கும் பணியில் தற்போது மாநகராட்சி அலுவலகம் முன் தூண்கள் அமைக்கும் பணி துவங்கி நடந்து வருகிறது. இதற்காக அங்குள்ள பெரியார், அம்பேத்கர், பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோரது சிலைகளை அகற்றாமல், நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டுமான பணி நடக்கிறது.

அழகர்கோவில் சாலையில் ஏறி இறங்க வசதியாக தல்லாகுளம் பெருமாள் கோயில் வரை பாதை அமைக்கப்பட உள்ளது. தூண்கள் இணைக்கும் பணி ஒரே நேரத்தில் 3 இடங்களில் நடைபெற்று வருகிறது. சொக்கிகுளத்தில் ஆரம்பித்த இணைப்பு பணி ஆயுதப்படை மாரியம்மன் கோயில் வரை பிரமாண்ட தோற்றத்துடன் காட்சி அளிக்கிறது. இதேபோல் நாராணபுரம், ஊமச்சிகுளத்திலும் இணைப்பு பணிகள் நடைபெறுகின்றன. நாராயணபுரத்திலுள்ள கோயில் ஏற்கனவே நவீன தொழில்நுட்பம் மூலம் நகர்த்தி வைக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 225 தூண்களில் 100க்கும் மேற்பட்ட தூண்கள் இணைந்துள்ளன.

இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணைய பொறியாளர் ஒருவர் கூறும்போது, ‘இன்னும் சில மாதங்களில் பாலம் கட்டும் பணி முடிவடையும். இதுவே தமிழகத்தின் நீண்ட பறக்கும் பாலமாகும். ஊமச்சிகுளத்தில் பறக்கும் பாலத்தில் இருந்து இறங்கியதும், புதிதாக அமைக்கப்படும் நான்குவழிச்சாலை வழியாக கொட்டாம்பட்டி சென்று திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இணைகிறது.

எனவே பறக்கும் பாலம் வழியாக செல்லும்போது மதுரையில் இருந்து திருச்சிக்கு 23 கி.மீ. பயண தூரம் குறையும். மதுரை ரிங்ரோட்டில் இருந்து திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்தை குறைக்க வாய்ப்பு ஏற்படும். மதுரையில் இருந்து திருச்சிக்கு இந்த பாலத்தின் மூலம் 100 நிமிடங்களில் பயணிக்க முடியும்’ என்றார்.

Related Stories: