சீன செல்போன் நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.5,551 கோடி மதிப்புள்ள டெபாசிட்டை பறிமுதல் செய்தது அமலாக்கத்துறை

டெல்லி: அந்நிய செலாவணி சட்டமீறல் எதிரொலியாக இந்தியாவில் செயல்படும் சீன செல்போன் நிறுவனத்திடம் இருந்து ரூ.5,551 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சீனாவை சேர்ந்த செல்போன் நிறுவனமான சியோமி, ரெட்மி என்ற பெயரில் இந்தியாவில் செல்போன்களை தயாரித்து வர்த்தகம் செய்து வருகிறது. இந்தியாவில் உள்ள கிளை நிறுவனமான சியோமி இந்தியா ஒன்றிய அரசின் அனுமதியை பெறாமல் ரூ.5,551 கோடிக்கு இணையான அந்நிய செலாவணியை இந்தியாவுக்கு வெளியே அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து அந்நிய செலாவணி சட்டத்தை மீறியதற்காக சியோமி நிறுவனத்தின் டெபாசிட் தொகையை பறிமுதல் செய்ய அமலாக்கத்துறை உத்தரவிட்டு கடந்த ஏப்ரல் மாதம் அதனை ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைத்தது. ஃபெமா எனப்படும் அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனை ஆய்வு செய்து வந்த அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் நியமிக்கபட்ட உயரதிகாரி அமலாக்கத்துறையின் பறிமுதல் உத்தரவுக்கு நேற்று அனுமதி அளித்துள்ளார். அரசின் அனுமதியை பெறாமல் பெருமளவுக்கு அந்நிய செலாவணியை இந்தியாவுக்கு வெளியே சியோமி நிறுவனம் அனுப்பி இருப்பது ஃபெமா சட்டத்தின் 4-வது பிரிவை மீறிய செயல் என்ற அமலாக்கத்துறையின் புகார் சரிதான் என்று அவர் தெரிவித்துள்ளார்.

காப்புரிமை தொகையை தான் அனுப்பியதாக சீன செல்போன் நிறுவனம் கூறுவது ஏற்புடையது அல்ல என்றும் ஃபெமா அதிகாரி கூறியுள்ளார். இதையடுத்து சீன செல்போன் நிறுவனமான சியோமி நிறுவனத்தின் ரூ.5,551 கோடி மதிப்புள்ள டெபாசிட் தொகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் அமலாக்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட தொகைகளில் இதுதான் மிகப்பெரிய தொகை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் பறிமுதல் நடவடிக்கை குறித்து சியோமி இதுவரை தகவல் எதையும் வெளியிடவில்லை.

Related Stories: