ரவுடி உயிரிழந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்

சென்னை: அயனாவரம் ஏகாங்கிபுரம் 4வது தெருவை சேர்ந்தவர் ஆகாஷ் (20). இவர் மீது ஓட்டேரி, வியாசர்பாடி, கொளத்தூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இவர் கடந்த 20ம் தேதி இரவு பெரம்பூர் மங்களபுரம் சந்திர யோகி சமாதி தெரு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாலகிருஷ்ணமூர்த்தி (37) என்பவருக்கு சொந்தமான காரின் முன்பக்க கண்ணாடிகளை தனது நண்பனுடன் சேர்ந்து கல்லால் அடித்து உடைத்தார். இந்த, புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த ஓட்டேரி போலீசார் கடந்த 21ம் தேதி மாலை ஆகாஷை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்தனர். அப்போது அவர் முழு போதையில் இருந்ததால் ஆகாஷின் அக்கா காயத்ரி என்பவரிடம் எழுதி வாங்கிக்கொண்டு நாளை காலை மீண்டும் ஆகாஷை காவல் நிலையம் அழைத்து வரவேண்டும் என்று கூறி அனுப்பி வைத்தனர்.

அதன்பிறகு இரவு ஆகாஷ் அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு, போதை மாத்திரைகளை உட்கொண்டதாக கூறப்படுகிறது. அதிகமான போதை மாத்திரைகளை உட்கொண்டதால் உடல்நிலை மோசமாகி அன்று இரவே அவரது குடும்பத்தினர் அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவன் நேற்று முன்தினம் காலை 7 மணி அளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், போலீசார் அழைத்து சென்று ஆகாஷை அடித்துள்ளனர் என அவரது உறவினர்கள் சிலர் குற்றம் சாட்டினர். இதனை அடுத்து எழும்பூர் 10வது குற்றவியல் நடுவர் லட்சுமி மேற்பார்வையில் நேற்று முன்தினம் அகாஷின் உடல் பரிசோதனை செய்து அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

நேற்று அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க தமிழக  டிஜிபி உத்தரவிட்டார். இதனைதொடர்ந்து, சிபிசிஐடி துணை கண்காணிப்பாளர் சசிதர் தலைமையிலான போலீசார் இந்த வழக்கை விசாரிக்கின்றனர். நேற்று முதல் கட்டமாக  அவர்களது குழுவினர் ஓட்டேரி காவல் நிலையம் வந்து காவல் நிலையத்தில் இருந்த கோப்புகளை ஆய்வு செய்தனர். தொடர்ந்து சிபிசிஐடி போலீசார்  இந்த வழக்கை விசாரணை செய்ய உள்ளனர்.

Related Stories: