புளியந்தோப்பு பகுதியில் பிரபல கஞ்சா வியாபாரி சரமாரி வெட்டிக் கொலை

பெரம்பூர்: புளியந்தோப்பு பகுதியில் பிரபல கஞ்சா வியாபாரி சரமாரி வெட்டிக்கொலை ஐந்து பேர் கொண்ட கும்பல் வெறி செயல், தப்பியோடிய மர்ம நபர்களை போலீசார் வழக்குபதிவு செய்து தேடிவருகின்றனர். சென்னை, புளியந்தோப்பு காந்திநகர் எட்டாவது தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன் (எ) சேட்டு (33). இவர் மீது இரண்டு கொலை உட்பட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இவர் நேற்று இரவு 8 மணியளவில் புளியந்தோப்பு நெடுஞ்சாலை காந்திநகர் பேருந்து நிறுத்தம் அருகே  அமர்ந்து நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஐந்துக்கும் மேற்ப்பட்ட மர்ம நபர்கள் கார்த்திகேயனை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த கார்த்திகேயனை மீட்டு ஆட்டோ மூலம் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அங்குள்ளவர்கள் அனுப்பி வைத்தனர். ஆனால்,சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பேசன் பிரிட்ஜ் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தினர்.அதில், கடந்த 2013ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ரஞ்சித் என்பவரை கார்த்திகேயன் கொலை செய்துள்ளார். இதற்கிடையில் கார்த்திகேயன் கடந்த மார்ச் மாதம் பேசன் பிரிட்ஜ் போலீசாரால் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு கடந்த 15ம் தேதி அவர் பிணையில் வெளிவந்துள்ளார்.

அவர் சிறையில் இருந்து வெளிவந்த தகவல் அறிந்த மர்ம நபர்கள் திட்டம் போட்டு இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. எனவே அந்த கொலை பழி வாங்கும் நோக்கில் ரஞ்சித்தின் அண்ணன் பிரேம் மற்றும் அவரது கூட்டாளிகளான கார்த்திக் என்கின்ற நாய் கடி கார்த்திக் மற்றும் 4 பேர் சேர்ந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். உயிரிழந்த கார்த்திகேயனுக்கு மனைவியும் ஒரு குழந்தையும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: