தொடங்கி வைக்கிறார் மோடி: இன்று முதல் 5ஜி சேவை

புதுடெல்லி:  அதிவேக இணைய வசதியை அளிக்கும் 5 ஜி சேவையை பிரதமர் மோடி இன்று துவக்கி வைக்கிறார். 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் கடந்த ஜூலையில் நடந்தது. ரிலையன்ஸ் ஜியோ, பாரதி ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் அதானி டேட்டா வொர்க்ஸ் லிமிடெட் ஆகிய  நிறுவனங்கள் இந்த ஏலத்தில் பங்கேற்றன. ஏலத்தின் முடிவில் ரூ.1,50,173 கோடிக்கு 5ஜி அலைக்கற்றைக்கான உரிமம் விற்பனை செய்யப்பட்டது. தொலைத்தொடர்புத் துறையில் முன்னணியில் இருக்கும் ஜியோ நிறுவனம் அதிக அளவிலான அலைக்கற்றையை ஏலத்தில் எடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து அக்டோபருக்குள் சில முக்கிய நகரங்களில் 5 ஜி சேவைகள் தொடங்கப்படும் என்று ஒன்றிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்  கூறியிருந்தார்.

இந்நிலையில், ஆசியாவின் மிகப் பெரிய தொழில்நுட்ப  கண்காட்சியான, ‘இந்திய கைப்பேசி மாநாடு’ டெல்லி பிரகதி மைதானத்தில் இன்று  முதல் வரும் 4ம் தேதி வரை நடக்கிறது. ஒன்றிய தொலைத் தொடர்பு துறை  மற்றும்  இந்திய செல்லுலார் ஆபரேட்டர்கள் சங்கம் ஆகியவை இணைந்து இதை நடத்துகின்றன. இந்த  மாநாட்டின் முதல் நாளான இன்று, 5ஜி சேவையை பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்.

Related Stories: