தேசிய விளையாட்டு போட்டி; தங்கம் வென்றார் பவானி தேவி: ஹாட்ரிக் சாதனை

அகமதாபாத்: தேசிய விளையாட்டு போட்டியின் மகளிர் வாள்வீச்சு சேபர் பிரிவில் தமிழக வீராங்கனை பவானி தேவி தங்கப் பதக்கம் வென்றார். இறுதிப் போட்டியில் ஜக்மீத் கவுருடன் (பஞ்சாப்) நேற்று மோதிய பவானி தேவி அபாரமாக விளையாடி 15-3 என்ற புள்ளிக் கணக்கில் எளிதாக வென்று முதலிடம் பிடித்தார். ஏற்கனவே 2011 மற்றும் 2015ல் கேரள அணிக்காக விளையாடி தங்கப் பதக்கம் வென்றிருந்த பவானி தேவி நேற்று 3வது தங்கம் வென்று ஹாட்ரிக் சாதனை படைத்தார். கொச்சியில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய மையத்தில் பயிற்சி மேற்கொண்டதால் முன்பு கேரள அணிக்காகக் களமிறங்கி தங்கப் பதக்கங்களை வென்ற அவர், முதல் முறையாக தமிழக அணிக்கு தங்கப் பதக்கத்தை பெற்றுத் தந்துள்ளார்.

* மகளிர் உயரம் தாண்டுதலில் மேற்கு வங்கத்தின் ஸ்வப்னா பர்மன் புதிய தேசிய சாதனையுடன் (1.83 மீட்டர்) தங்கப் பதக்கம் வென்றார்.

* ஆண்கள் மல்யுத்தம் 97 கிலோ ஃபிரீ ஸ்டைல் பிரிவில் அரியானா வீரர் தீபக் முதலிடம் பிடித்தார்.

* ஆண்கள் துப்பாக்கிசுடுதல் 25 மீட்டர் ரேப்பிட் பயர் பிஸ்டல் பிரிவில் அரியானா வீரர் அனிஷ் தங்கப் பதக்கத்தை முத்தமிட்டார்.

* ஆண்கள் மல்யுத்தம் கிரெகோ ரோமன் 87 கிலோ எடை பிரிவு பைனலில் பஞ்சாப் வீரர் ஹர்பிரீத் சிங்குடன் மோதிய சுனில் குமார் (அரியானா) 8-0 என்ற புள்ளிக் கணக்கில் அபாரமாக வென்று தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.

* மகளிர் துப்பாக்கிசுடுதல் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இளவேனில் வாலறிவன் தங்கம், மெஹுலி கோஷ் வெள்ளி, திலோத்தமா வெண்கலம் வென்றனர்.

* ஆண்கள் துப்பாக்கிசுடுதல் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் ருத்ராங்க்‌ஷ் பட்டீல் தங்கப் பதக்கம், அர்ஜுன் பபுதா வெள்ளிப் பதக்கம் வென்றனர். பிரதாப் சிங் தோமர் 3வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்துடன் திருப்தி அடைந்தார்.

* ஆண்கள் 20 கி.மீ நடை பந்தயத்தில் சர்வீசஸ் வீரர் தேவேந்தர் சிங் தங்கம், உத்தரகாண்ட் வீரர் சுராஜ் பன்வார் வெள்ளி வென்றனர்.

Related Stories: