மகளிர் டி20 ஆசிய கோப்பை; வங்கதேசத்தில் இன்று தொடக்கம்: இந்தியா - இலங்கை மோதல்

சில்ஹட்: மகளிர் ஆசிய கோப்பை டி20 தொடர், வங்கதேசத்தில் இன்று தொடங்குகிறது. ஹர்மன்பிரீத் தலைமையிலான இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் இலங்கையுடன் மோதுகிறது. முதல் முறையாக கடந்த 2004ம் ஆண்டு தொடங்கிய இந்த தொடர், தொடர்ந்து 2005, 2006, 2008 வரை தலா 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் போட்டியாகவே நடத்தப்பட்டது. அதன் பிறகு 2012, 2016, 2018ல்  டி20 போட்டியாக நடத்தப்பட்டு வருகிறது. 2020ல் நடைபெற வேண்டிய  போட்டி கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்ட நிலையில், தற்போது வங்கதேசத்தின் சில்ஹட் நகரில் இன்று தொடங்குகிறது. இதில் இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான், தாய்லாந்து, மலேசியா, இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 7 அணிகள் பங்கேற்கின்றன.

ரவுண்டு ராபின் முறையில் ஒவ்வொரு அணியும் மற்ற 6 அணிகளுடன் தலா ஒருமுறை மோத உள்ளன. இந்த சுற்றில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். அவற்றில் வெல்லும் அணிகள் இறுதி ஆட்டத்தில் விளையாடும். தினமும் 2 ஆட்டங்கள் காலை 8.30, பகல் 1.00 மணிக்கு தொடங்கி நடக்க உள்ளன. தொடக்க லீக் ஆட்டத்தில் வங்கதேசம் - தாய்லாந்து அணிகளும், 2வது ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகளும் மோதுகின்றன.

இந்தியா ஆதிக்கம்

* இதுவரை நடந்த 7 ஆசிய கோப்பை போட்டிகளில் இந்தியா 6 முறை சாம்பியனாகி ஆதிக்கம் செலுத்தி உள்ளது.

* மகளிர் ஆசிய கோப்பை போட்டி அறிமுகமான 2004ல் இந்தியா, இலங்கை அணிகள் மட்டுமே பங்கேற்றன. மொத்தம் 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடராக அந்தப் போட்டி நடத்தப்பட்டது.

* இன்று தொடங்கும் 8வது தொடர் உள்பட அனைத்து ஆசிய கோப்பையிலும் விளையாடிய  பெருமை இந்தியா, இலங்கை அணிகளுக்கு மட்டுமே.

* ஏற்கனவே விளையாடி உள்ள சீனா (2012),  ஹாங்காங் (2012),  நேபாளம் (2012, 2016) ஆகிய அணிகள் இந்த முறை தகுதி பெறவில்லை.

* மலேசிய அணியின் கேப்டன் வில்பிரட் துரைசிங்கம்,  வீராங்கனை தனுஸ்ரீ ஸ்ரீமுகுநன் இந்தியாவை பூர்விகமாகக் கொண்டவர்கள்.

* அமீரக அணியில்  இந்துஜா நந்தகுமார், தீர்த்தா சதீஷ் உட்பட 90 சதவீத வீராங்கனைகள் இந்திய வம்சாவழியை சேர்ந்தவர்கள்.

* இதுவரை நடந்த 7  ஆசிய கோப்பையிலும் விளையாடிய வீராங்கனை என்ற பெருமைக்குரியவர் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ்.

* ஆசிய கோப்பையில் அதிக ரன் விளாசிய சாதனையும் மிதாலி ராஜ் வசமே உள்ளது (588 ரன்).

* விக்கெட் வேட்டையில் மற்றொரு இந்திய வீராங்கனை நீது டேவிட் முதல் இடத்தில் உள்ளார் (26 விக்கெட்).

Related Stories: