சித்தூரில் போலி ஆவணம் தயாரித்து வெளிநாட்டில் வசிப்பவர்களின் ரூ73 கோடி மதிப்பு நிலம் மோசடி: இளம்பெண் உள்பட 7 பேர் கைது

சித்தூர்: சித்தூரில் போலி ஆவணம் தயாரித்து வெளிநாட்டில் வசிப்பவர்களின் நிலங்களை ரூ73.70 கோடிக்கு விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்ட இளம்பெண் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம், சித்தூர் நகர டிஎஸ்பி சுதாகர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: ஆந்திராவில் சித்தூர் மாநகரத்தில் போலீசார் நடத்திய விசாரணையில், கட்டமஞ்சு பகுதியில் தினேஷ்குமார் என்பவருக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தை மீனாட்சி மற்றும் பார்வதி ஆகிய இருவரின் பெயருக்கு கருணாகர், யமுனா, ராஜசேகர், ஜெயச்சந்திரா, சுரேந்திரபாபு ஆகியோர் சேர்ந்து போலி ஆவணங்கள் தயாரித்து விற்று மோசடி செய்தது தெரியவந்தது.

அதேபோல், குமார் என்பவருக்கு சொந்தமான 2.70 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் தயார் செய்து வேறொரு நபருக்கு விற்றது தெரிந்தது. சித்தூரை சேர்ந்த அல்தாபுக்கு சொந்தமான வீட்டுமனை பட்டாவை போலியாக தயாரித்து ரூ1கோடிக்கு நிலத்தை விற்றுள்ளனர். தாராபதி நாயுடுக்கு சொந்தமான ரூ30 கோடியிலான 5 ஏக்கர் நிலத்துக்கு போலி ஆவணங்கள் தயாரித்து பெங்களூரு மாநகரத்தில் உள்ள வங்கியில் ரூ18 கோடி கடன் வாங்கியுள்ளனர்.

இவர்களிடம் இருந்து ரூ50 கோடி சொத்துக்களின் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், இவர்களிடம் நடத்திய விசாரணையில், வெளி மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் வசிக்கும் நபர்களை நோட்டமிட்டு நிலங்களை வாங்கியதாக போலி ஆவணங்கள் தயாரித்தும், அவர்களின் வாரிசாக போலி ஆவணங்கள் தயாரித்தும் பதிவு செய்து நிலங்களை ரூ73.70 கோடிக்கு விற்று மோசடியில் ஈடுபட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

Related Stories: