காந்தி பிறந்த நாளான அக்.2ம் தேதி சமூக நல்லிணக்க மனிதச்சங்கிலி நடத்த அனுமதி வழங்க வேண்டும்: டிஜிபியிடம் கம்யூனிஸ்ட், விசிக தலைவர்கள் கூட்டாக மனு

சென்னை: ‘சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி’ நடத்த காந்தி பிறந்த நாளான நாளை அனுமதி வழங்க வேண்டும் என்று சிபிஐ(எம்) மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன், விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோர் கூட்டாக டிஜிபியிடம் மனு அளித்துள்ளனர். சென்னை காவல்துறை இயக்குநர் அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ேக.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளன் ஆகியோர் நேற்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: தேசத் தந்தை மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2ம் தேதியன்று தமிழகம் முழுவதும் சிபிஐ (எம்), சிபிஐ, விசிக மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ், மதிமுக, திராவிடர் கழகம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், தமிழக வாழ்வுரிமை கட்சி,

மனித நேய மக்கள் கட்சி மற்றும் மத நல்லிணக்கத்தில் நம்பிக்கையுள்ள அமைப்புகளின் சார்பில் “சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி” நடத்திட திட்டமிட்டு ஆங்காங்கே உள்ள காவல்துறை அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அனைத்து இடங்களிலும் இந்த மனிதச் சங்கிலிக்கு அனுமதி மறுக்கப்பட்டு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அக்டோபர் 2ம் தேதி அன்று சமூக நல்லிணக்கத்தில் நம்பிக்கைக் கொண்ட அமைப்புகள் மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நடத்தவிருக்கும் மனித சங்கிலிக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபடும் அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் மதச்சார்பற்ற கொள்கையில் ஆழ்ந்த நம்பிக்கைக் கொண்ட, மத நல்லிணக்கத்திற்கும், மக்கள் ஒற்றுமையைப் பாதுகாத்திடவும் அனுதினமும் போராடி வரும் அமைப்புகளாகும்.

எனவே, மதவாத அடிப்படையில் இயங்கும் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட அமைப்புகளையும், மதச்சார்பின்மை, மத நல்லிணக்கத்தில் நம்பிக்கை கொண்ட அரசியல் கட்சிகளையும் ஒரே நேர்கோட்டில் பார்ப்பது பொருத்தமற்றது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். எனவே, அக்டோபர் 2ம் தேதி அன்று தமிழகம் முழுவதும் மாலை 4 மணியளவில் திட்டமிடப்பட்டிருக்கும் “சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி” இயக்கத்திற்கு அனுமதி அளித்திட அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: