காவல்துறையை இழிவுபடுத்தி பேசியதாக எச்.ராஜா மீது போலீசில் புகார்

காரைக்குடி: காவல்துறையை இழிவு படுத்தும் நோக்கத்துடன் திட்டமிட்டு பேசிய பாஜ மூத்த நிர்வாகி எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்ககோரி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் நவுசாத் அலி. இவர் காரைக்குடி டிஎஸ்பியிடம் அளித்த புகாரில் தெரிவித்துள்ளதாவது: காரைக்குடி முன்னாள் சட்டமன்ற உறுப்பினராகவும் பாஜ முன்னாள் தேசிய செயலாளராகவும், தற்போது பாஜ உறுப்பினராக இருப்பவர் எச்.ராஜா. இவர் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா (பிஎப்ஐ) அமைப்பு மத்திய அரசால் தடை செய்யப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பிஎப்ஐ பற்றி பேசினால் தேச துரோக வழக்கில் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறியிருந்தார். கடந்த செப். 29ம் தேதி நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி), பிஎப்ஐ இயக்கத்திடம் சம்பளம் வாங்குகிறாரா என சந்தேகம் வருவதாக காவல்துறையை அவமதிக்கும் இழிவுபடுத்தும் நோக்கத்தோடு திட்டமிட்டு பேசியுள்ளார். எனவே எச்.ராஜா மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Stories: