இன்னும் 25 ஆண்டுகளில் இந்தியாவின் தலையெழுத்தை நகரங்கள் தீர்மானிக்கும்: பிரதமர் மோடி கணிப்பு

அகமதாபாத்: ‘இன்னும் 25 ஆண்டுகளில் இந்தியாவின் தலையெழுத்தை நகரங்கள் தீர்மானிக்கும்’ என பிரதமர் மோடி கூறி உள்ளார். குஜராத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க நிலையில், இம்மாநிலத்துக்கு 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் சென்ற பிரதமர் மோடி, அகமதாபாத்தில் நேற்று காந்திநகர்-மும்பை இடையேயான வந்தே பாரத் எக்ஸ்பிரல் ரயில், அகமதாபாத் மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டம் ஆகியவற்றை தொடங்கி வைத்தார். காந்திநகர் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயிலை கொடி அசைத்து தொடங்கி வைத்த அவர், அதில் பயணமும் செய்தார். தன்னுடன் பயணித்த ரயில்வே ஊழியர்களின் குடும்பத்தினர், பெண் தொழில் முனைவோர், மாணவ, மாணவிகள், இளைஞர்களுடன் கலந்துரையாடினார்.

பின்னர், அகமதாபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், ‘‘மாறிவரும் காலத்திற்கு ஏற்ப, நகரங்களை தொடர்ந்து நவீனமாக்குவது அவசியம். தடையற்ற இணைப்புதான் வேகமான வளர்ச்சிக்கு முக்கியமாகும். எனவே, பலவகையான போக்குவரத்து இணைப்புக்கான கதி சக்தி தேசிய மாஸ்டர் திட்டத்தில் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. உலகளாவிய வணிக தேவைகளுக்கு ஏற்ப நாட்டில் புதிய நகரங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அகமதாபாத், சூரத், வதோதரா, போபால், இந்தூர், ஜெய்ப்பூர் போன்ற நகரங்கள் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிக்கும். அவை, இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதை உறுதி செய்யும்’’ என்றார்.

ஆம்புலன்சுக்கு வழிவிட்டார்

* பிரதமர் மோடி நேற்று அகமதாபாத்தில் இருந்து காந்தி நகருக்கு சென்ற போது, வழியில், ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது. இதற்கு பிரதமரின் பாதுகாப்பு வாகனங்கள் வழிவிட்டு ஒதுங்கும் வீடியோ, சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இதற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

* இந்த ரயிலில், விமானத்தில் இருப்பது போன்ற தொடுதல் இல்லாத வசதிகளுடன் கூடிய பயோ வாக்கூம் கழிவறைகள், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வசதிகளுடன் கூடிய கழிவறைகள் இடம் பெற்றுள்ளன.

* வந்தே பாரத் ரயில் மூலம் அகமதாபாத்-மும்பை இடையேயான பயணம் நேரம் 8 மணி நேரத்தில் இருந்து ஐந்தரை மணி  நேரமாக குறையும். சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் கூட 6 முதல் 8 மணி நேரம் பயணிக்க வேண்டும்.

* வந்தே பாரத் விரைவு ரயில்கள் முழுக்க முழுக்க உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை. இவை, வெறும் 140 விநாடிகளில் 160 கிமீ வேகத்தை எட்டும்.

Related Stories: