காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2ம் தேதி ரூ.1 கோடிக்கு கைத்தறி துணிகள் விற்பனை செய்ய திட்டம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2ம் தேதி அமெட் பல்கலை கழகத்துடன் இணைந்து ரூ.1 கோடி மதிப்பிலான கைத்தறி துணிகளை விற்பனை செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. தமிழக அரசின் காதி மற்றும் கைத்தறி துறையின் கீழ் நெசவு பணி செய்யும் நெசவாளர்களுக்கு கை கொடுத்து உதவும் பொருட்டு, அவர்களால் தயாரிக்கப்பட்ட துணிகள் மற்றும் பொருட்களை, காந்தியடிகள் பிறந்த நாளான அக்டோபர் 2ம் தேதி (நாளை) அமெட் பல்கலைக்கழகத்தின் சுமார் 4000 மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் கலைஞர் கருணாநிதி சாலை (இசிஆர்) மற்றும் ராஜீவ் காந்தி சாலை (ஓஎம்ஆர்) பகுதிகளில் வீடு வீடாக சென்று விற்பனை செய்வதென்ற ஒரு சமூக சேவை திட்டத்தை முன்னெடுக்க உள்ளனர்.

இத்திட்டத்தின்படி ஒரே நாளில் குறைந்தது ரூ.1 கோடி மதிப்பிலான காதி மற்றும் கைத்தறி துணிகளுடன், கிராம பொருட்களையும் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த சமூக சேவை திட்டத்தை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அக்டோபர் 2ம் தேதி காலை 6.30 மணியளவில் அமெட் பல்கலைக்கழக வளாகத்தில் கொடி அசைத்து தொடங்கி வைக்க உள்ளார். அமெட் பல்கலைக்கழகத்தின் 4000 மாணவர்களை கொண்டு ஒரே நாளில் ரூ. 1 கோடி மதிப்பிலான காதி மற்றும் கைத்தறி பொருட்களை விற்பனை செய்ய இயலும்போது தமிழ்நாட்டில் உள்ள 59 பல்கலைக்கழகங்கள் மற்றும் 2140 கல்லூரிகளில் பயிலும் 17,42,000 மாணவர்களை கொண்டு காதி மற்றும் கைத்தறி பொருட்களை முழுமையாக விற்பனை செய்வது எளிதானதாகும்.

இத்திட்டத்தை கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர் துறையின் அரசு முதன்மை செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ், அமெட் பல்கலை கழகத்தின் துணைவேந்தர் க.திருவாசகம், கைத்தறி துறையின் ஆணையர் டி.பி.ராஜேஷ், தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி சங்கர், அமெட் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் ஜெயபிரகாஷ்வேல்,  அமெட் பல்கலைக்கழகத்தின் முதல்வர் என்.ஆர்.ராம்குமார், காதி மற்றும் கைத்தறி துறையின் அலுவலர்களும் முன்னெடுத்துச் செல்லுகின்றனர்.

Related Stories: