சோகத்தில் ஈபிஎஸ்.. உற்சாகத்தில் ஓபிஎஸ்!: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

டெல்லி: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு இடைக்கால தடை விதித்து  உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த ஜூலை மாதம் 11ம் தேதி சென்னை அடுத்த வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூடியது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கட்சியின் தற்காலிக பொதுச்செயலாளராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இந்த கூட்டம் ஒருங்கிணைப்பாளர் இன்றி நடைபெற்றதால் அதனை செல்லாது என்று அறிவிக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். ஆனால் நீதிபதிகள் அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று தீர்ப்பளித்தனர்.

இந்த தீர்ப்பினை எதிர்த்து பன்னீர்செல்வம் தரப்பு உச்சநீதிமன்றத்தில் செய்திருந்த மேல் முறையீட்டு மனுவில் நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, கிருஷ்ண முராரி அமர்வு இன்று விசாரித்தது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ரஞ்சித்குமார் ஆஜரானார். அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகவில்லை என்று அவர் வாதங்களை முன்வைத்தார். எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர், அரியம்மா சுந்தரம் ஆஜராகி வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், இடைக்கால பொதுச்செயலாளராக உள்ளபோதே, பொதுச்செயலாளர் தேர்தலுக்கு அவசரம் காட்டுவது ஏன்? என்று பழனிசாமி தரப்புக்கு கேள்வி எழுப்பினர்.

இதையடுத்து அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவை பன்னீர்செல்வம் தரப்பினர் வரவேற்றுள்ளனர். அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான ஓ.பன்னீர்செல்வத்தின் மேல்முறையீட்டு மனு மீது பதில் அளிக்கவும், எடப்பாடி பழனிசாமிக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த பழனிசாமி தரப்பு ஆதரவாளர் சி.வி. சண்முகம், பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணைகள் முற்றுப்பெறும் வரை தேர்தலை நடத்த முடிவு செய்யவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதாக கூறினார்.

பொதுக்குழு கூட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் பச்சைக்கொடி காட்டி இருந்ததால் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை 3 மாதங்களுக்குள் நடத்த எடப்பாடி பழனிசாமி தரப்பினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால் உச்சநீதிமன்றத்தின் இன்றைய உத்தரவால் பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கும் திட்டத்துக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு உச்சநீதிமன்றம் தற்காலிக தடை விதித்துள்ள நிலையில், அதிமுகவில் நீடித்து வரும் உட்கட்சி குழப்பம், உச்சத்தை எட்டியுள்ளது.

Related Stories: