சவுகார்பேட்டையில் வீட்டில் பதுக்கிய ஒரு டன் ரேஷன் கோதுமை பறிமுதல்: அதிக விலைக்கு விற்றவர் கைது

தண்டையார்பேட்டை: சென்னை சவுகார்பேட்டையில் வீட்டில் பதுக்கிவைத்திருந்த ஒரு டன் ரேஷன் கோதுமை பறிமுதல் செய்யப்பட்டது. பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு வாங்கி வடமாநிலத்தவர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் பொதுவிநியோக திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு இலவசமாகவும், மானிய விலையிலும் ரேஷன் கடைகளில் அரிசி, கோதுமை, சர்க்கரை, பாமாயில், பருப்பு மண்ணெண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் சில பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்படும் அரிசி, கோதுமை ஆகியவை கடைகளில் பெற்றும், பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு வாங்கியும் அவற்றை  ஆந்திராவுக்கு கடத்தி சென்று பல கும்பல் அதிக விலைக்கு விற்பனை செய்து வருகிறது.

இதை தடுக்கும் விதமாக குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை காவல் ஆய்வாளர் சசிகலா மேற்பார்வையில் உதவி ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் சென்னை சவுகார்பேட்டை பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் நேற்று ஈடுபட்டனர்.

இதனிடையே, திருப்பள்ளி தெருவில் ஒரு வீட்டில் ரேஷன் கோதுமை பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை நடத்தினர்.  அங்கு வீட்டில் 21 மூட்டைகளில் 1050 கிலோ கோதுமை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து கோதுமை மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுதொடர்பாக அரசகுமார் (40) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை செய்ததில், ரேஷன் கடைகளில் வழங்கப்படும் கோதுமையை வியாசர்பாடி பகுதியில் பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு வாங்கி  சவுகார்பேட்டை பகுதியில் வடமாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதுகுறித்து குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: