தலையணையை முகத்தில் வைத்து அழுத்தி 2வது மனைவி படுகொலை: மின்சாரம் பாய்ந்து இறந்ததாக நாடகமாடிய கணவர் கைது

தண்டையார்பேட்டை: வண்ணாரப்பேட்டையில் தலையணையை முகத்தில் வைத்து அழுத்தி மூச்சு திணறடித்து 2வது மனைவியை கொலை செய்துவிட்டு, மின்சாரம் பாய்ந்து இறந்ததாக  நாடகமாடிய  கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை வண்ணாரப்பேட்டை நைனியப்பன் கார்டன் 6வது தெருவை சேர்ந்தவர் ஷாஜகான் (48). தனியார் லெதர் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது முதல் மனைவி இறந்துவிட்டார்.

இதனால், கடந்த 15 ஆண்டுக்கு முன்பு ஹசினா பேகம் (37) என்பவரை ஷாஜகான் இரண்டாம் திருமணம் செய்துள்ளார்.  ஹசினா பேகத்திற்கு குழந்தை இல்லை. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.  இந்நிலையில் நேற்று முன்தினம் ஷாஜகான், மாமியார் சபீரா பேகத்திற்கு போன் செய்து, மின்சாரம் பாய்ந்து ஹசினாபேகம் பேச்சு மூச்சு இல்லாமல் கிடக்கிறாள் என கூறியுள்ளார். இதனால் சபீரா பேகம் மற்றும் அவரது உறவினர்கள் பதறியடித்து கொண்டு ஷாஜகான் வீட்டுக்கு வந்துபார்த்தபோது ஹசினா பேகம் இறந்துவிட்டார். மகளின் உடலை பார்த்து தாய் மற்றும் உறவினர்கள் கதறிஅழுதனர்.

இந்த தகவல் அறிந்ததும் வண்ணாரப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு  வந்து விசாரணை நடத்தினர். பின்னர், ஹசினா பேகம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதனிடையே,  தனது மகள் சாவில் மர்மம் இருப்பதாக சபீராபேகம், வண்ணாரப்பேட்டை போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில்,  ஹசினா பேகம் கொலை செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.  

இதையடுத்து இன்ஸ்பெக்டர் தவமணி  கொலை வழக்குப்பதிவு செய்து ஷாஜகானை  கைது செய்து விசாரித்தார். தலையணையை முகத்தில் வைத்து அழுத்தி மூச்சு திணறடித்து ஹசினா பேகத்தை கொலை செய்துவிட்டு மின்சாரம் பாய்ந்து இறந்துவிட்டதாக நாடகமாடியது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ஷாஜகானை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: