உரிமையாளரின் கவனத்தை திசை திருப்பி 5 செல்போன், ரூ.1 லட்சம் துணிகர கொள்ளை: அரும்பாக்கத்தில் பரபரப்பு சம்பவம்

அண்ணாநகர்: சென்னை அருகம்பாக்கம் எம்எம்டிஏ காலனியை சேர்ந்தவர் அஜ்மீர் அலி (41). அதே பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார். நேற்று அஜ்மீர் அலியின் மனைவி கடையில் இருந்தார். அந்த நேரத்தில் இவரது கடைக்கு 2 பேர் பைக்கில் வந்தனர். ஒருவர் பைக்கில் வெளியே காத்திருக்க, மற்றொருவர் கடைக்கு சென்றார். அவர், ‘செல்போன் விலை அதிகமாக உள்ளது’ என பேச்சு கொடுத்து கொண்டிருந்தார். அப்போது, அஜ்மீர் அலியின் மனைவி, கடையின் உள்பகுதிக்குள் சென்றார்.

அந்த நேரத்தில், கடைக்குள் சென்று, கல்லாவில் இருந்த ரூ.1 லட்சம் ரொக்கம் மற்றும் விலையுயர்ந்த 5 செல்போன்களை திருடி கொண்டு, வெளியே பைக்கில் காத்திருந்தவருடன் மின்னல் வேகத்தில் தப்பி சென்றார். சிறிது நேரத்தில் அஜ்மீர் அலியின் மனைவி வந்தபோது மர்ம நபரை காணவில்லை. செல்போன்களை சரிபார்த்தார். அப்போதுதான், பணம் மற்றும் செல்போன் திருடப்பட்டிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் கடையில் பொருத்தப்பட்டிருந்த  கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, மர்ம நபர்தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது.இதுகுறித்து அரும்பாக்கம் காவல்நிலையத்தில் அஜ்மீர் அலி புகார் அளித்தார். மேலும் வீடியோ காட்சிகளையும் ஒப்படைத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories: