பொள்ளாச்சி அருகே 16 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் மந்திரவாதி உட்பட 3 பேர் கைது: தலைமறைவு காதலனுக்கு வலை

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே 16வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மந்திரவாதி உட்பட மூன்று பேரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர். காதலனை தேடி வருகின்றனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 16வயது சிறுமிக்கும், திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி விக்னேஷ் (20) என்பவருக்கும் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது. இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது.

இவர்களுக்கு, மடத்துக்குளத்தை சேர்ந்த விக்னேஷின் உறவினர் ஈஸ்வரன்(50) என்பவர் அடைக்கலம் கொடுத்துள்ளார். விக்னேஷ் ஆசைவார்த்தை கூறி சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். இதில் அந்த சிறுமி கர்ப்பமடைந்தார். இதையடுத்து விக்னேஷ், சிறுமியின் கர்ப்பத்தை கலைக்க, தனது தாத்தா பொள்ளாச்சியை சேர்ந்த சின்னசாமி (55) என்பவரிடம் தெரிவித்துள்ளார். அவ்வப்போது சிறுமியை அழைத்து, சின்னசாமி ஆறுதல் வார்த்தைகளை கூறியதுடன், சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும், அப்பகுதியில் மந்திரவாதி அர்ஜூனன் (60) என்பவரிடம், சிறுமியை அழைத்து சென்ற சின்னசாமி, மந்திரவாதி சொன்னபடி கேட்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய அர்ஜூனனும் சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் வேதனையடைந்த அந்த சிறுமி, தனக்கு வயிறு பெரிதாகிக்கொண்டே போகிறது.

எனவே, நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என காதலன் விக்னேஷிடம் கூறியுள்ளார். அதன்பின் இருவரும் வீட்டிலிருந்து வெளியேறி, திருமணம் செய்வதற்காக பழனிக்கு சென்றனர். கடந்த 2 வாரத்துக்கு முன்பு தனது மகளை காணவில்லை என சிறுமியின் பெற்றோர் பொள்ளாச்சி தாலுகா போலீசில் அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு தேடி வந்தனர்.

இந்நிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன்பு சிறுமி வீடு திரும்பினார். அப்போது போலீசார் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில், சிறுமி தனக்கு நடந்த கொடுமை குறித்து போலீசாரிடம் தெரிவித்தார். இதையடுத்து, சிறுமியை பலாத்காரம் செய்ததாக கூறப்படும் விக்னேஷின் தாத்தா சின்னசாமி, மந்திரவாதி அர்ஜூனன், அடைக்கலம் கொடுத்த ஈஸ்வரன் ஆகியோர் மீது போக்சோ வழக்குப்பதிந்து நேற்று அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர். சிறுமியை கோவையில் உள்ள காப்பகத்தில், போலீசார் கொண்டுவிட்டனர். இதில், தலைமறைவாக உள்ள சிறுமியின் காதலன் விக்னேஷை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: