ஓட்டலில் உணவை ஆர்டர் செய்துவிட்டு மாடல் அழகி தூக்கிட்டு தற்கொலை: மும்பையில் பரபரப்பு

மும்பை: ஓட்டலில் உணவை ஆர்டர் செய்து விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மாடல் அழகியின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் அந்தேரி பகுதியில் இருக்கும் பிரபல ஓட்டலில் 40 வயது மதிக்கத்தக்க மாடல் அழகி தங்கியிருந்தார். அவர் நேற்று முன்தினம் இரவு ஓட்டல் அறையில் இருந்து கொண்டு உணவு ஆர்டர் செய்திருந்தார்.

அடுத்த சில நிமிடங்களில் உணவை தயார் செய்து அவற்றை எடுத்துக் கொண்டு ஓட்டல் அறைக்கு ஊழியர் சென்றார். அப்போது அறையின் கதவு திறக்கப்படவில்லை. பல முறை முயற்சித்தும் கதவு திறக்கப்படாததால் ஓட்டல் மேலாளர் அந்த அறைக்கு வந்தார். அவரும் முயற்சித்தார். ஆனால் அறையின் கதவு திறக்கப்படவில்லை. அதையடுத்து வெர்சோவா போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

போலீசார் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது மாடல் அழகி மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். சம்பவ இடத்தில் தற்கொலை கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட தற்கொலை கடிதத்தில், ‘மன்னிக்கவும். எனது தற்கொலைக்கு யாரும் காரணமில்லை.

என்னால் மகிழ்ச்சியாக வாழமுடியவில்லை. எனக்கு அமைதி தேவை. அதனால் தற்கொலை செய்து கொள்கிறேன்’ என்று எழுதியுள்ளார். அதையடுத்து போலீசார் மாடல் அழகியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: