தமிழ்நாடு, கேரளாவை தொடர்ந்து 23வது நாளாக நடைப்பயணம்: கர்நாடகாவில் ராகுல் காந்திக்கு காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு..!!

பெங்களூரு: ஒற்றுமை இந்தியா நடைப்பயணத்தை 23வது நாளாக தொடரும் ராகுல் காந்திக்கு கர்நாடகாவில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கடந்த 7ம் தேதி கன்னியாகுமரியில் தனது நடைப்பயணத்தை தொடங்கிய ராகுல் காந்தி கேரளாவில் பல நாட்கள் பயணம் மேற்கொண்டு மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் வழியாக நீலகிரி மாவட்டம் கூடலூர் கோழிப்பாலத்திற்கு நேற்று வந்தார். பின்னர் அவர் கூடலூரில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் தங்கி இரவு ஓய்வெடுத்தார். தமிழ்நாட்டில் நடைப்பயணத்தை முடித்துக்கொண்ட ராகுல் காந்தி, இன்று காலை விமானில் கர்நாடகாவுக்கு புறப்பட்டார்.

உதகை மற்றும் கோழிக்கோடு சந்திப்பு சாலை அருகே சாம்ராஜ் நகர் மாவட்டம் குண்டலு பேட்டையில் அவருக்கு கர்நாடக காங்கிரஸ் கட்சியினர், உற்சாக வரவேற்பு அளித்தனர். முன்னாள் முதல்வர் சித்த ராமய்யா, சால்வை அணிவித்து வரவேற்பு தெரிவித்தார். பின்னர் பேசிய ராகுல், கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறேன். இந்த பயணத்தின் போது பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்-ன் உண்மையான நோக்கத்தை மக்களிடம் அம்பலப்படுத்தி வருகிறேன்.

மக்களிடம் பிளவு ஏற்பட காங்கிரஸ் கட்சி அனுமதிக்காது என்றார். ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு அடுத்த மாதம் 4 மற்றும் 5ம் தேதியன்று நடைப்பயணத்தை நிறுத்தி வைக்க ராகுல் காந்தி முடிவு செய்துள்ளார். ஒற்றுமை இந்தியா நடைப்பயணத்தில் ராகுல் காந்தி இதுவரை 532 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து வந்துள்ளார். பல்வேறு மாநிலங்கள் வழியே மேலும் 3 ஆயிரம் தூரத்தை கடக்க வேண்டியுள்ளது. இறுதியாக காஷ்மீரில் தமது நடைப்பயணத்தை ராகுல் காந்தி நிறைவு செய்யவுள்ளார்.

Related Stories: