கொந்தகை முதுமக்கள் தாழியில் இரும்பு வாள் கண்டெடுப்பு: போர் வீரனை புதைத்திருக்க வாய்ப்பு

திருப்புவனம்: கொந்தகையில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழியில் 40 செமீ நீளம் கொண்ட இரும்பு வாள் கிடைத்துள்ளது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் தமிழக தொல்லியல் துறை சார்பில் 8ம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. கீழடி அருகே உள்ள கொந்தகை, அகரம் ஆகிய இடங்களில் 3ம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. கொந்தகையில் மொத்தம் 143 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதில் 107வது முதுமக்கள் தாழி நேற்று தமிழக தொல்லியல் துறை இயக்குநர் சிவானந்தம் தலைமையில் திறக்கப்பட்டது.

கீழடி தொல்லியல் பிரிவு இணை இயக்குநர் ரமேஷ், தொல்லியல் அலுவலர்கள் அஜய், காவ்யா, சுரேஷ் ஆகியோர் தாழியின் உள்ளே இருந்த பொருட்களை எடுத்தனர். அதில் 40 செமீ நீளமுள்ள இரும்பு வாள் இருந்தது. போர் வீரன் புதைக்கப்பட்ட தாழியாகவோ அல்லது புதைக்கப்பட்டவர் போர்க்கருவிகள் பிரியராகவோ இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது. மேலும் தாழியினுள் கருப்பு சிவப்பு வண்ண சுடுமண் குடுவைகளும் கிடைத்தன. இவற்றை ஆய்வுக்கு அனுப்பிய பின்னர்தான் முழு விவரம் தெரியவரும் என தமிழக தொல்லியல் துறை இயக்குநர் சிவானந்தம் தெரிவித்தார்.

Related Stories: