உலக இருதய தினம் இளம் வயதினருக்கு இதய பாதிப்பு அதிகரிப்பு: நெல்லை கருத்தரங்கில் தகவல்

நெல்லை: உலக  இருதய தினத்தை முன்னிட்டு நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்  இருதயம் வடிவில் டாக்டர்கள் மற்றும் நர்சுகள் நின்று விழிப்புணர்வு  ஏற்படுத்தினர். உலக இருதய தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் 29ம் தேதி  கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மல்டி  ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் நேற்று காலை இருதய தின விழிப்புணர்வு  நிகழ்ச்சி நடந்தது.

இருதயவியல் பிரிவு துறைத்தலைவர் டாக்டர் ரவிச்சந்திரன் எட்வின்  கொடியசைத்து தொடங்கி வைத்தார். செவிலியர் பயிற்சி மாணவிகள், பிஎஸ்சி பாரா  மெடிக்கல் மாணவ, மாணவிகள் பங்கேற்று இருதய பாதுகாப்பு குறித்த பதாகைகளை  ஏந்தி கோஷமிட்டனர். மேலும் இருதய வடிவில் நின்று  விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ்குமார் விழிப்புணர்வு கண்காட்சியை திறந்து வைத்தார். பின்னர்  விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.

மருத்துவக் கல்லூரி  முதல்வர் டாக்டர் ரவிச்சந்திரன் தலைமை வகித்து பேசுகையில், சமீபகாலமாக இருதய பாதிப்பால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.  தற்போது வயது குறைந்தவர்களுக்கும் இருதய நோய் பாதிப்பு அதிகமாக உள்ளது.  குறிப்பாக மாரடைப்பு விகிதம் அதிகரித்துள்ளது. இதற்கு 5 முக்கிய காரணங்கள்  உள்ளன. புகைப்பழக்கம் காரணமாக ரத்த நாளங்கள் எளிதில் சுருங்கி விடுகின்றன.  

மன அழுத்தம், மாறுபட்ட வாழ்க்கை முறை, அதிகப்படியான மாசு காற்று, துரித உணவு  பழக்கம், உடல் உழைப்பின்மை போன்றவை இதயத்தை பலவீனமாக்குகின்றன. மேலும்  இணைப்பிரச்னைகளான ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், அதிக உடல் பருமன், சீரற்ற  கொழுப்பு போன்றவையும் இதயத்தை பாதிக்கும். மரபு வழி பாதிப்பும் முக்கிய  காரணமாக உள்ளது. டாக்டர்களின் ஆலோசனையை பின்பற்றினால் நோய் பாதிப்பில்  இருந்து தப்பலாம் என்றார்.

மருத்துவக் கல்லூரி துணை முதல்வர் டாக்டர்  சாந்தாராம், கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கருத்தரங்கில்  உயர் சிறப்பு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் கந்தசாமி, சிறுநீரகவியல்  துறைத்தலைவர் டாக்டர் ராமசுப்பிரமணியன் மற்றும் பல்வேறு துறை மருத்துவ  பேராசிரியர்கள் பங்கேற்று பேசினர். நிகழ்ச்சியில் இருதய நிபுணர்கள்  பாலச்சந்திரன், விஸ்வநாதன், செல்வகுமரன், மணிகண்டன், திருலோகசந்தர், அன்டன்  பிரபு உள்பட பலா் கலந்து கொண்டனர். பயிற்சி மருத்துவர் பிராங்க்ளின்  இமானுவேல், ெசவிலிய பயிற்றுநர் செல்வன் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

Related Stories: