புதிய குழாய் அமைக்கப்பட்டதால் போடி நகருக்கு குடிநீர் பிரச்னை இனி இல்லை: மகிழ்ச்சியில் பொதுமக்கள்

போடி: போடியில் 33 வார்டுகள் அடங்கிய முதல் நிலை நகராட்சி பகுதியில் ஒரு லட்சத்திற்கும் மேலான பொதுமக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள மக்களுக்கு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் போடி அருகே உள்ள மேற்கு மலை தொடர்ச்சி மலையில் உள்ள குரங்கணி மலைப்பகுதியில் இருக்கும் சாம்பலாறு மெகா தடுப்பணையில் வருடம் முழுவதும் கிடைக்கும் ஊற்றுத் தண்ணீரை போடி பரமசிவன் மலை அடிவார பகுதியில் நிரப்பப்பட்டு சுத்திகரிப்பு செய்து தினந்தோறும் போடி நகர மக்களுக்கு காலையிலும், மாலையிலும் விநியோகம் செய்யப் பட்டு வந்தது.

பின்னர் மக்கள் தொகை அதிகரிக்க அதிகரிக்க காலை மாலை நிறுத்தப்பட்டு தினந்தோறும் காலையிலும், சில பகுதிகளில் ஒரு நாள் விட்டு ஒரு நாளும் சப்ளை செய்யப்பட்டது.

இந்நிலையில் 20 ஆயிரம் மக்கள் தொகையாக இருந்ததால் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 4 எம்எம் குழாய் மட்டுமே பதிக்கப்பட்டு குடிநீர் எடுக்கப்பட்டது. அடுத்து மக்கள் தொகை அதிகரித்தவுடன் 1978ம் ஆண்டு 4 எம்எம்மை அகற்றி 110 எம்எம் ஆக மாற்றப்பட்டது. தற்போது வரையில் குடிநீர் எடுக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. 1 லட்சம் பொதுமக்கள் பெருகி விட்ட நிலையில் எதிர்கால திட்டமாக 110 எம் எம்மை நீக்கி விட்டு 173 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பணிகள் நடைபெற்று வந்தது.

குறிப்பாக சாம்பலாற்று ஊற்று அணையில் இருந்து முந்தல் வழியாக பரமசிவன் மலை அடிவாரப் பகுதி வரை 450 எம்.எம் கொண்ட அகல உருக்கு குழாய் பதிக்கப்பட்டது. மேலும் நகரில் உள்ள முக்கியப் பகுதிகளில் 10 லட்சம் முதல் 11 லட்சம் கொள்ளளவு குடிநீர் கொண்ட நான்கு மேல்நிலைத் தொட்டிகளும் கட்டப்பட்டு தயார் நிலையில் உள்ளது. பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் சாம்பலாற்று தடுப்பணையில் 450 எம்.எம் கொண்ட குழாய் பதித்து இணைப்பு கொடுப்பதற்காக கடந்த 28,29 ஆகிய இரண்டு நாட்கள் முறையாக பொதுமக்களுக்கு குடிநீர் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. நேற்று வரை இப்பணிகள் தொடர்ந்து குடிநீர் வடிகால் வாரிய பணியாளர்கள் மூலம் நடைபெற்று முடிந்தது.

கடந்த இரண்டு நாட்கள் குழாய் இணைக்கப்பட்டு முழுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டதால், இன்று முதல் வழக்கம் போல பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படும். இனிமேல் மேற்கு மலை தொடர்ச்சி பகுதியில் மழை எவ்வளவு பெய்தாலும் கூட போடி நகருக்கு குடிநீர் வினியோகம் தடை படாது. குடிதண்ணீர் பற்றாக்குறையும் இருக்காது என நகராட்சி நிர்வாகம் உறுதியளித்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: