குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 36-வது தேசிய விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி..!

அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 36 வது தேசிய விளையாட்டு போட்டி கோலாகலமாக தொடங்கியது. இந்தியாவில் கவுரவமிக்க போட்டிகளில் ஒன்றான தேசிய விளையாட்டு 1924-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. முதலில் 2 ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்பட்ட இந்த போட்டி பின்னர் நடைமுறை சிக்கல் காரணமாக சில சமயங்களில் குறிப்பிட்ட காலத்துக்குள் நடைபெறவில்லை. கடைசியாக 35-வது தேசிய விளையாட்டு 2015-ம் ஆண்டு கேரளாவில் நடைபெற்றது. பின்னர் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த தொடர் தள்ளிவைக்கப்பட்டு இருந்தது.

இதை தொடர்ந்து நாடு முழுவதும் 7000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் 36 வது தேசிய விளையாட்டு போட்டிகள் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அக்டோபர் 12-ம் தேதி வரை நடைபெற உள்ளன. இந்நிலையில் 2 நாள் பயணமாக குஜராத் சென்ற பிரதமர் மோடி தேசிய விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்தார். அப்போது நடைபெற்ற கண்கவர் கலைநிகழ்ச்சிகள் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தன.

குஜராத்தில் உள்ள அகமதாபாத், காந்தி நகர், சூரத், வதோதரா, ராஜ்கோட், பவநகர் ஆகிய 6 நகரங்களில் தேசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. நீச்சல், தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, ஹாக்கி, கைப்பந்து உட்பட 36 வகையான விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. கோகோ, யோகா, மலர் கம்பம் ஆகியவை அறிமுக போட்டியாக இடம் பெற்றுள்ளன. 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்கள், சர்வீசஸ் ஆகியவற்றை சேர்ந்த சுமார் 7 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் போட்டியில் பங்கேற்றுள்ளதால் குஜராத் மாநிலமே விழா கோலம் கொண்டுள்ளது. 

Related Stories: