ஜம்மு காஷ்மீரில் 2 பேருந்துகளில் குண்டுவெடிப்பு: பாக்.கிற்கு எதிராக போராட்டம்

ஜம்மு:  ஜம்மு காஷ்மீரின் உதம்பூரில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 2 பேருந்துகளில் அடுத்தடுத்து குண்டு வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் 2 பேர் காயமடைந்தனர். குண்டுவெடிப்பை கண்டித்து பாகிஸ்தானுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் நகரில் நேற்று முன்தினம் நள்ளிரவு தோமைல் சவுக்கில் பெட்ரோல் பங்க் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பேருந்தில் திடீரென குண்டு வெடித்தது. இதில் அங்கிருந்த இரண்டு பேர் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் நடந்து சில மணி நேரத்துக்கு பின், பசந்த்கர் பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பேருந்தில் அதிகாலை 5.30 மணி அளவில் குண்டு வெடித்தது. இதில் பேருந்தின் மேற்கூரை வெடித்து சிதறி, பலத்த சேதமடைந்தது. ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரு, 4ம் தேதி 3 நாள் பயணமாக ஜம்மு வருகிறார். இந்நிலையில் அடுத்தடுத்து பேருந்துகளில் குண்டு வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குண்டு வெடிப்பை தொடர்ந்து போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் கண்காணிப்பபை விரப்படுத்தியுள்ளனர்.

பொதுமக்கள் தங்களது வாகனங்களில் மர்ம பொருட்கள் ஏதேனும் இருந்தால் கவனமுடன் கையாள வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே அந்த பகுதி மக்கள் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பாகிஸ்தான் தான் காரணம் என்று கூறி, பாகிஸ்தானுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டனர்.

Related Stories: