பட்டினி, வேலையின்மை கொண்ட நாடு இந்தியா: ஒன்றிய அமைச்சர் கட்கரி சர்ச்சை

நாக்பூர்: நமது நாடு பட்டினி, வேலையின்மை, உள்ளிட்ட பிரச்னைகளை எதிர்கொள்ளும் ஏழை மக்கள் வாழும் பணக்கார நாடு என்று ஒன்றிய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் ராஷ்ட்ரிய சேவா சங்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கட்கரி பேசியதாவது: உலகிலேயே மிகவும் வேகமாக வளரும் பொருளாதார நாடு இந்தியா. ஏழை மக்கள் தொகை கொண்ட பணக்கார நாடு. நமது நாடு பணக்கார நாடு. ஆனால் மக்கள் வறுமை, பட்டினி, வேலையின்மை, பணவீக்கம், சாதி பாகுபாடு, தீண்டாமை மற்றும் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு நல்லதல்லாத பிற காரணிகளை எதிர்கொள்கிறார்கள்.

சமூக மற்றும் பொருளாதார சமத்துவத்தை நிலைநாட்ட வேண்டிய அவசியம் உள்ளது. சமூகத்தில் இரு பிரிவினரிடையேயான இடைவெளி அதிகரித்துள்ளது. இதேபோல் பொருளாதார ஏற்றத்தாழ்வும் அதிகரித்துள்ளது. ஏழை-பணக்காரர் இடைவெளியை குறைப்பதற்கு கல்வி, சுகாதாரம் மற்றும் சேவை துறைகளில் பணியாற்ற வேண்டியது அவசியமாகும். நாட்டில் 124 மாவட்டங்கள் சமூக, கல்வி மற்றும் சுகாதார அடிப்படையில் பின்தங்கியுள்ளன. நகர்ப்புறங்கள் அதிகளவில் வளர்ச்சி அடைந்துள்ளன. ஆனால் வசதி வாய்ப்புக்கள் இல்லாததால் ஏராளமான மக்கள நகரங்களுக்கு இடம்பெயருகின்றனர்” என்றார்.

அடுத்த ஆண்டு முதல் 6 ஏர் பேக் திட்டம்

ஒன்றிய அமைச்சர் நிதின்கட்கரி தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘வாகன தொழிற்சாலைகள் எதிர்கொள்ளும் உலகளாவிய விநியோக சங்கிலி தடை, பொருளாதாரத்துடன் தொடர்புடைய வட்டி விகிதம் மற்றும் தேசிய உற்பத்தி திறன் பாதிப்பு உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு 8 பயணிகளை ஏற்றி செல்லும் கார்களில் 6 ஏர் பேக் கட்டாயம் என்ற திட்டம் 2023ம் ஆண்டு அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் செயல்படுத்தப்படும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: